சென்னை: எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி எரிமலை வெடிப்பு எதிரொலியால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியா நாட்டில் ஹெய்லி குப்பி எரிமலை சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு வெடித்துள்ளது. இதனால் வானில் சுமார் 14 கிலோ மீட்டர் வரை தீக்குழம்புகள் பரவி சாம்பல் மேகங்கள் படர்ந்து காணப்படுகிறது.
விமானங்கள் வான் தளத்தில் பறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பாதையிலுள்ள விமான போக்குவரத்து கடமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையிலிருந்து மும்பை செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் காலை 11 மணியளவில் தாமதமாக புறப்பட்டு சென்றது. சென்னை-மும்பை விமானம் மட்டுமின்றி, டெல்லி- ஐதராபாத், மும்பை – ஐதராபாத், மும்பை- கொல்கத்தா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதே போல் காலை 9.30 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகைய ஹெய்லி குப்பி எரிமலை வெடிப்பு காரணமாக குறிப்பிட்ட இடங்களில் பறந்த விமானங்கள் முன்னெச்சரிக்கையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை – லண்டன் செல்ல வேண்டிய பல்வேறு விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா, பிரிட்டிஷ் ஏர் லைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு விமான சேவைகள் 3 மணி நேரம் காலதாமதமாகவும் புறப்பட்டு செல்கிறது. சில சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உள்நாட்டு விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவித்தனர்.
