திண்டுக்கல்: எஸ்ஐஆர் படிவங்கள் சமர்ப்பிப்பதில் சிரமங்கள் இருக்கிறது. ஒன்றிய அரசு எஸ்ஐஆருக்கு காலக்கெடு நீட்டிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை செல்வதற்காக திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு நேற்று மாலை வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அதிமுக தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கின்ற குழுவாக செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களது கருத்து, தமிழக மக்களின் கருத்து. அதிமுக இணைந்தால் தான் வெற்றி பெற முடியும்.
எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விவரங்கள் கேட்டுள்ளனர். அதனை அவர்களே பூர்த்தி செய்து கொடுத்தால் பிரச்னை இல்லை. எஸ்ஐஆர் படிவங்கள் சமர்ப்பிப்பதில் பல சிரமங்கள் இருக்கிறது. மத்திய அரசு கூர்ந்து கவனித்து, பாமர மக்களும் பூர்த்தி செய்யக் கூடிய நிலையில் படிவங்களை அமைத்திடவேண்டும்.
எஸ்ஐஆருக்கு காலக்கெடு நீட்டிக்க வேண்டும். இது மக்களின் கோரிக்கை. கால அவகாசம் கொடுக்காதது தவறான நடைமுறை. கண்டிப்பாக கால அவகாசம் கொடுக்க வேண்டும்’’ என்றார். காஞ்சிபுரத்தில் நடந்த தவெக கூட்டத்தில் விஜய் அளித்த வாக்குறுதிகள் குறித்த கேள்விக்கு, அவரது கனவு நனவாகட்டும் என்றார். பீகாரில் பாஜ கூட்டணி பெற்ற வெற்றிக்கு எஸ்ஐஆர் காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கூறியது குறித்து கேட்டபோது, ‘‘திண்டுக்கல் சீனிவாசன் உண்மையைத் தவிர வேறு ஒன்றும் பேச மாட்டார்’’ என்றார்.
சீமான் தொடர்ந்து பத்திரிகையாளர்களை மிரட்டுகிறார் என்ற கேள்விக்கு, ‘‘பத்திரிகையாளர்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். எந்த கட்சியாக இருந்தாலும் பத்திரிகையாளர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும்’’ என்றார். ‘உங்களுடன் இருந்தவர்கள் விலகுவது உங்களை பலவீனப்படுத்தும் முயற்சியா’ என்ற கேள்விக்கு, ‘‘ஒருபோதும் என்னை தனிமைப்படுத்துவது நடக்காது. நாம் பிறக்கும்போது எந்த பதவியுடனும் பிறக்கவில்லை இழப்பதற்கு’’ என்றார்.
* மீண்டும் கூட்டணியா?
‘தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா’ என்ற கேள்விக்கு, ‘‘இணைவதற்கான அடிப்படை பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. அரசியலில் எதுவும் நடக்கலாம். எங்களுக்கும் தனிக் கொள்கை உள்ளது. அந்த கொள்கையின் வடிவில் எங்களுக்கு வாய்ப்பு தந்தால்….’’ என்று நிறுத்திக் கொண்டார். பின்னர், ‘‘செங்கோட்டையன், தினகரன் உடன் சந்திப்பு நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. தினந்தோறும் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். தினகரன், அண்ணாமலை சந்திப்பு என்பது நல்ல சந்திப்பு தான். அனைவரும் ஒன்றிணைய அதிகமான வாய்ப்புள்ளது’’ என்றார்.
