ஆரணி: ஆரணி அருகே தாயின் நகைகளை திருடி அடமானம் வைத்து 17, 21 வயது காதலிகளுடன் சுற்றிய பிளஸ் 2 மாணவன், வேலூரில் செல்போன் வாங்கி ஒரு காதலிக்கு பரிசளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 17 வயது மகன், பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த வாரம் பள்ளிக்கு சென்ற மாணவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
மேலும் வீட்டில் உள்ள பீரோவில் இருந்த இரண்டரை சவரன் நகைகள் காணாமல் போயிருந்ததால், நகைகளை திருடிச் சென்றிருக்கலாம் என சந்தேகமடைந்தனர். இதுகுறித்து மாணவனின் தாய் ஆரணி டவுன் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி மாணவனை தேட தொடங்கினர். இதில் ஆரணியில் நேற்று முன்தினம் மாணவனை பார்த்ததாக சிலர் கொடுத்த தகவலின்பேரில், ஒரு பகுதியில் பதுங்கியிருந்த மாணவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது நகைகளை திருடிச்சென்று ரூ.1 லட்சத்துக்கு அடமானம் வைத்து 2 காதலிகளுடன் ஊர் சுற்றி பணத்தை காலி செய்துவிட்டு, வீட்டுக்கு செல்ல பயந்து ஆங்காங்கே சுற்றிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது: பிளஸ் 2 மாணவனுக்கும், அப்பகுதியில் உள்ள மற்றொரு பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளனர். மாணவன் தனது காதலியை மகிழ்விக்க பரிசு பொருட்களை வாங்க முடிவு செய்துள்ளார்.
ஆனால் பணம் இல்லாததால் வீட்டில் ஆட்கள் இல்லாதபோது தாயின் நகைகளை திருடி, அதேபகுதியை சேர்ந்த ஓட்டலில் வேலை செய்யும் அவரது நண்பர் உதவியுடன், அடகு கடைகளில் ரூ.1 லட்சத்திற்கு நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். பின்னர் மாணவன், காதலியான பிளஸ்2 மாணவி மற்றும் நகைகளை அடமானம் வைக்க உதவிய நண்பருடன் வேலூருக்கு சென்றுள்ளார்.
அங்கு மாணவிக்கு செல்போன் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்துள்ளார். பின்னர், மாணவி மாணவனுடன் சுற்றிவிட்டு மாலை செல்போனுடன் அவரது வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனால், மாணவரும், அவரது நண்பரும் வேலூரில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கி ஓட்டலில் சாப்பிடுவது, வெளியே சுற்றுவது என பணத்தை செலவழிக்க தொடங்கி உள்ளனர்.
மேலும் நகைகளை திருடிச் சென்ற மாணவன், நர்சிங் கல்லூரியில் படிக்கும் 21 வயது மாணவியையும் காதலித்து வந்துள்ளார். அந்த நர்சிங் மாணவியை அழைத்துக்கொண்டு காஞ்சிபுரத்துக்கு சென்று பல இடங்களில் சுற்றி உள்ளார். ஒரு கட்டத்தில் கையில் இருந்த முழு தொகையும் காலியானதால், ஆரணிக்கு வந்து வீட்டிற்கு செல்ல பயந்து சுற்றிக்கொண்டிருந்துள்ளார். தொடர்ந்து மாணவனிடம் விசாரணை நடந்து வருகிறது என்றனர். இதற்கிடையில் மாணவன் அடகு வைத்த கடைக்கு சென்று அங்கிருந்த சில நகைகளை போலீசார் மீட்டனர்.
மற்ற நகைகளை அடகு வைத்துள்ள கடைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் நகைகளை அடகு வைக்க உதவி செய்து தலைமறைவான மாணவனின் நண்பனையும் போலீசார் நேற்று மாலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்2 மாணவன் தாயின் நகைகளை திருடி அடகு வைத்து, காதலிகளுடன் ஊர் சுற்றிய சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
