×

குபேர லிங்க சன்னதியில் சிறப்பு வழிபாடு திருவண்ணாமலையில் குபேர கிரிவலம்

திருவண்ணாமலை, நவ.19: திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் சென்று ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக அமைந்திருக்கிறது. இங்கு அமைந்துள்ள மலையே மகேசன் என்பதால், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பத்தர்கள் தீபமலையை வலம் வந்து வழிபடுகின்றனர். திருவண்ணாமலையில், தமிழ் மாதப் பிறப்பு நாட்களில் மலை வலம் வருவதுதான் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த வழக்கம். பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வது கடந்த 40 ஆண்டுகளாக பிரபலம் அடைந்தது. எனவே, தமிழ் மாதப்பிறப்பு கிரிவலம் குறைந்து, பவுர்ணமி கிரிவலம் வெகுவாக புகழடைந்துள்ளது. அதனால், ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.

இந்நிலையில், குபேர கிரிவலம் என்பது கடந்த சில ஆண்டுகளாக பிரசித்தி பெற தொடங்கியிருக்கிறது. கிரிவலப்பாதையின் எட்டு திசைகளிலும் அமைந்துள்ள அஷ்ட லிங்க சன்னதிகளில், ஏழாவது சன்னதியாகஅமைந்திருப்பது குபேர லிங்கம். செல்வத்துக்கு அதிபதியாக வணங்கப்படும் குபேரன் வழிபட்ட லிங்கம் என்பதால், குபேர லிங்க சன்னதி என அழைக்கின்றனர். கார்த்திகை மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியும், சிவராத்திரியும் இணைந்து வரும் நாளில், சிவனை வழிபட்டு குபேரனே கிரிவலம் செல்வதாக பக்தர்களின் நம்பிக்கை. எனவே, செல்வத்துக்கு அதிபதியான குபரேன் கிரிவலம் செல்லும்நாளில், கிரிவலம் சென்றால் செல்வம் பெருகும், கடன் சுமை குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு குபேர கிரிவலம் செல்ல உகந்த நாளான நேற்று, பிரதோஷ காலமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை குபேர லிங்க சன்னதியில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடந்தது. அதையொட்டி, குபேர லிங்க சன்னதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். எனவே, தரிசன வரிசையை முறைப்படுத்த, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
குபேர லிங்க சன்னதியை தரிசனம் செய்துவிட்டு, கிரிவலம் சென்றால் பலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையால், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து தொடங்கி கிரிவலம் சென்று மீண்டும் குபேர லிங்க சன்னதியில் நிறைவு செய்தனர். மேலும், நேற்று மாலை திடீரென மழை பெய்தது ஆனாலும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குபேர கிரிவலம் சென்று வழிபட்டனர்.

Tags : Kubera ,Linga ,Kubera Girivalam ,Tiruvannamalai ,Annamalaiyar Temple ,Bhootha ,Mahesan ,Deepamalai ,
× RELATED ஊர்நாட்டாண்மை கொலை தலைமறைவான 2 பேர்...