திருமலை: கர்னூலில் ஆம்னி பஸ் தீ விபத்தில் 18 பயணிகள் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பைக்கின் பின்னால் பஸ் மோதியதாக கூறப்பட்ட நிலையில், ஏற்கனவே விபத்தாகி சாலையில் கிடந்த பைக் மீது தான் பஸ் மோதியதாக போலீசார் உறுதி செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு படுக்கை வசதி கொண்ட தனியார் ஆம்னி பஸ் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், சின்னத்தேக்கூர் அருகே சென்று கொண்டிருந்தது.
இதில் டிரைவர், கிளீனர் உட்பட 45 பேர் பயணித்தனர். அப்போது ஆம்னி பஸ்சின் அடியில் சிக்கிய பைக் 300 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது. இதில் பஸ்சிலும் தீப்பிடித்து 18 பயணிகள் கருகி பலியாகினர். 27 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இதில் பைக்கில் வந்த வாலிபரும் உயிரிழந்த நிலையில், ஆம்னி பஸ் மோதிய விபத்தில் இறந்திருப்பதாக போலீசார் கருதினர். பைக்கின் பின்னால் பஸ் மோதியதால் டிரைவர் அலட்சியமாக ஓட்டியதாக முதலில் கருதப்பட்டது.
ஆனால் விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. விபத்திற்கு முன்பாக, கர்னூல் பிரஜாநகரில் வசிக்கும் சிவசங்கர்(20), நானி ஆகியோர் பைக்கிற்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சின்னதேகுரு அருகே சாலையின் வலது பக்கத்தில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது. இதில் பைக்கை ஓட்டி வந்த சிவசங்கர் சம்பவ இடத்திலேயே தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்குப் பின்னால் இருந்த நானி, லேசான காயங்களுடன் தப்பினார்.
நண்பர் உயிரிழந்ததால் அச்சமடைந்து நானி அங்கிருந்து தப்பியோடினார். பின்னர் வேகமாக வந்துகொண்டிருந்த ஆம்னி பஸ், சாலையின் நடுவே கிடந்த பைக் மீது மோதியிருக்கிறது. இதில் பைக் பஸ்சின் அடியில் சிக்கி பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்துள்ளது. ஒரே இடத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகள் நடந்துள்ளதாக போலீசார் உறுதி செய்துள்ளனர். அதன்படி சிவசங்கர் ஏற்கனவே விபத்தில் இறந்த நிலையில், பின்னர்தான் ஆம்னி பஸ்சில் பைக் சிக்கி 18 பயணிகள் கருகி பலியாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பைக் ஓட்டி வந்த சிவசங்கர் குடிபோதையில் இருந்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.
