×

பலாத்கார சிறுமிகளின் பெயரை வெளியிட்ட முன்னாள் பெண் டிஜிபி மீது வழக்கு

 

திருவனந்தபுரம்: கேரளாவில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிகளின் பெயர், விவரங்களை யூடியூபில் வெளியிட்ட பாஜ கவுன்சிலரும், கேரள முன்னாள் பெண் டிஜிபியுமான ஸ்ரீலேகா மீது போக்சோ பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கேரளாவின் முதல் பெண் டிஜிபி ஸ்ரீலேகா ஆவார். கடந்த வருடம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் சாஸ்தமங்கலம் வார்டில் பாஜ வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆகவே அவருக்கு மேயர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மேயர் பதவி கிடைக்கவில்லை. இதனால் பாஜ மீது கடும் அதிருப்தியில் உள்ளார். இதனால் சமீபத்தில் கேரளாவில் வெற்றி பெற்ற பாஜவை சேர்ந்த உள்ளாட்சி உறுப்பினர்கள் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றபோது ஸ்ரீலேகா செல்ல மறுத்து விட்டார். ஸ்ரீலேகா சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்தநிலையில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு இறந்த சிறுமிகள், அவரது குடும்பத்தினரின் பெயர், விவரங்களை தனது யூடியூப் சேனல் மூலம் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், அவரது குடும்பத்தினரின் பெயர், விவரங்களை வெளியிட்ட ஸ்ரீலேகா மீது வழக்கு பதிவு செய்யக் கோரி சமூக ஆர்வலரான ஜெயச்சந்திரன் திருவனந்தபுரம் மியூசியம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். சட்டத்தைக் குறித்து நன்றாகத் தெரிந்த ஒருவர், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெயர், விவரங்களை வெளியிட்டு அவர்களை அவமானப்படுத்துவது மன்னிக்க முடியாத குற்றமாகும் என்று தனது புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். தொடர்ந்து ஸ்ரீலேகா மீது மியூசியம் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : TGB ,Thiruvananthapuram ,Kerala ,Bhokso Division ,Srileka ,DGP ,YouTube ,
× RELATED ஐதராபாத்தில் பரபரப்பு காதலன்...