*போலீசார் விசாரணை
திருமலை : காதலன் திருமணத்திற்கு சம்மதிக்காததால், யூ டியூபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் கோமலி. இவர் அதே பகுதியில் இயங்கி வரும் பியூட்டி பார்லருக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
அப்போது பியூட்டி பார்லரின் உரிமையாளரின் மகனான நிகில் ரெட்டியுடன் கடந்த 2023ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் நண்பர்களாக பழகி வந்தனர். மேலும், நண்பர்களாக பழகி வந்த கோமலி, சில மாதங்களில் நிகில் ரெட்டியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு நிகில் ரெட்டிக்கு ஐதராபாத், சித்ரபுரி காலனியில் உள்ள சாப்ட்வேர் கம்பனியில் வேலை கிடைத்ததால், அவர் சித்ரபுரி பகுதியில் உள்ள தன்னுடன் பணிபுரியும் நண்பர்களுடன் தங்கி பணிபுரிந்து வந்தார். இதையடுத்து கோமலிக்கு ஐதராபாத்தில் உள்ள மல்லரெட்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்த பிறகு, கோமலி ஐதராபாத் வந்து பாலநகரில் தங்கி படித்து வந்தார்.
இதையடுத்து, கோமலி கடந்த ஆண்டு பாலநகரிலிருந்து, சித்ரபுரி காலனிக்கு குடிபெயர்ந்தார். மேலும், கல்லூரிக்கு செல்லும்போது, தனது செல்போனில் வீடியோ எடுத்து யூ டியூப்பில் பதிவிட்டு ஏராளமான ரசிகர்களை பெற்றார்.
இதைத்தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன் கோமலி, நிகில் ரெட்டியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு நிகில் ரெட்டி மறுக்கவே, அவரது தாயாரிடம் தனது காதல் குறித்து, கோமலி தெரிவித்துள்ளார்.
நிகிலுக்கு விருப்பம் இல்லாதபோது, நான் எப்படி அவனை வற்புறுத்தமுடியும் என்று அவர் கூறி, கோமலியை சமாதானம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி, கோமலி மீண்டும் நிகில் ரெட்டியை தனது வீட்டிற்கு அழைத்து, திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளாராம். அதற்கு நிகில் ரெட்டி மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதனால், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த கோமலி, 23ம் தேதி இரவு தனது அறையில் உள்ள மின்விசிறியில், துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த துராயதுர்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சி.எச்.வெங்கண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும், கோமலி தங்கியிருந்த வீட்டில் போலீசார் சோதனை செய்ததில், அவர் தனது காதல் குறித்து ஒரு டைரியில் ஏழுதி வைத்திருந்ததாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். ஆய்வில், கடந்த 21ம் தேதி நிகில் ரெட்டி கோமலி வீட்டிற்கு வந்து போனது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
