ஸ்ரீநகர்: காஷ்மீர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உணவு உரிமை குறித்து துணை குடியரசுத் தலைவர் உரையாற்றினார். ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றிய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், உணவு சுதந்திரத்திற்கு ஆதரவாக தனது கருத்துக்களைப் பதிவு செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘நாம் நமது உணர்வுகளைப் பற்றி பெருமைப்படலாம், ஆனால் அதற்காகப் பிறருடைய உணர்வுகளைக் குறைத்து மதிப்பிடக் கூடாது.
நான் தீவிர சைவ உணவாளியாக இருந்தாலும், ஜார்கண்ட் ஆளுநராக பணியில் இருந்தபோது காஷ்மீர் மாணவர்கள் ராஜ்பவனுக்கு வந்திருந்தனர். அப்போது அவர்களின் கலாச்சாரம் மற்றும் உணவுப் பழக்கத்தை மதிக்கும் வகையில், அவர்களுக்கு அசைவ உணவுகளை வழங்க வேண்டுமென உத்தரவிட்டேன். உண்மையான ஜனநாயகவாதி யாரும் தனது கருத்துக்களைப் பிறர் மீது திணிக்க மாட்டார்கள். இந்தியாவின் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் வகையில் கலாசாரத் திணிப்புகளைத் தவிர்த்து, ஒருவருக்கொருவர் இடமளித்து வாழ்வதே சிறந்தது’என அவர் மாணவர்களிடையே வலியுறுத்தினார்.
வடமாநில பண்டிகைகளின் போது இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பது தொடர்பான விவாதங்கள் அவ்வப்போது எழுந்து வந்தன. குறிப்பாக, காஷ்மீரின் பாரம்பரிய உணவான ‘வாஸ்வான்’ முறையை சைவமாக மாற்றுவது தொடர்பான சர்ச்சைகளும் பல்வேறு தரப்பினரிடையே ஒருவித பிரச்னை நிலையை ஏற்படுத்தியிருந்தது. இத்தகைய சூழலில், மக்களின் உணவுத் தேர்வுகள் மற்றும் கலாசார பழக்கவழக்கங்களை மதிப்பது ஜனநாயக நாட்டின் அடிப்படை மாண்பு குறித்து துணை ஜனாதிபதி பேசியது குறிப்பிடத்தக்கது.
