திருமலை: திருப்பதியில் நாக சதுர்த்தியையொட்டி நேற்று பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று நாக சதுர்த்தியையொட்டி மலையப்ப சுவாமி தேவி, பூதேவி தாயார்களுடன் பெரிய சேஷ வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராமவதாரத்தில் லட்சுமணனாகவும், கிருஷ்ணா அவதாரத்தில் பலராமனாகவும், வைகுண்டத்தில் மகா விஷ்ணுவிற்கு ஆதிசேஷன் படுக்கையாக விளங்கி வருகிறார்.
ஆதிசேஷன் தனது பிரியமான பக்தர் என்பதால் ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் முதல் நாள் பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.அதேபோல், நாக சதுர்த்தியையொட்டி நேற்று இரவு 7 மணியளவில் வாகன மண்டபத்தில் இருந்து பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதியுலாவின்போது மாடவீதியின் இருபுறமும் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
