×

ஸ்ரீகாளஹஸ்தியில் மார்க்கெட் கமிட்டி விழா தேசிய அளவில் மதிப்புமிக்க மாநிலமாக ஆந்திரா திகழ்கிறது

*அமைச்சர் சவிதா பெருமிதம்

ஸ்ரீகாளஹஸ்தி : தேசிய அளவில் மதிப்புமிக்க மாநிலங்களில் ஒன்றாக ஆந்திர மாநிலம் திகழ்வதாக அமைச்சர் சவிதா பெருமிதம் தெரிவித்தார். திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் விவசாய விளைபொருள் சந்தை குழுத்தலைவரின் பதவியேற்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ஆந்திர கைத்தறி மற்றும் ஜவுளி அமைச்சர் சவிதா, முன்னாள் அமைச்சர் சோமிரெட்டி சந்திரமோகன் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அவர்கள் சந்தை குழுத்தலைவர் செஞ்சய்யா நாயுடுவை வாழ்த்தி, சால்வை அணிவித்து பாராட்டினர். அப்போது அமைச்சர் சவிதா பேசுகையில், `சந்தைக்குழுத்தலைவர் பதவியை பொறுப்பாக கருதி விவசாயிகளின் நலனுக்காக பாடுபட வேண்டும். விவசாயிகளின் பிரச்னைகளை அறிந்து அவற்றை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பிரதமர் நரேந்திரமோடியின் ஆசி காரணமாக நாட்டின் மதிப்புமிக்க மாநிலங்களில் ஒன்றாக ஆந்திர மாநிலம் திகழ்கிறது. அதற்கேற்ப அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக சூப்பர் சிக்ஸ் திட்டங்கள் மூலம் மக்களுக்கு நலத்திட்டங்களை முழுமையாக வழங்கிய பெருமை கூட்டணி அரசுக்குச் சேரும்.

கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமாக ஸ்ரீகாளஹஸ்தி மார்கெட் கமிட்டி குழுவின் தலைவர் பதவியை செஞ்சய்யா நாயுடுவுக்கு வழங்கிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணைமுதல்வர் பவன் கல்யாண், கல்வி அமைச்சர் நாரா. லோகேஷ் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி எம்எல்ஏ பொஜ்ஜல. சுதீர்ரெட்டி ஆகியோருக்கு நன்றி.

இவ்வாறு பேசினார்.முன்னதாக விழாவில் உள்நாட்டு பொருட்களை வாங்குவது தொடர்பாக உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் சந்திரகிரி எம்எல்ஏ புலிவர்த்தி நானி, முன்னாள் அமைச்சர் சோமிரெட்டி சந்திரமோகன்ரெட்டி, ஆந்திர மாநில பாஜக துணைத்தலைவர் கோலா ஆனந்த், ரவிநாயுடு, துடா தலைவர் டாலர் திவாகர் ரெட்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Market Committee Ceremony ,Srikalahasti ,Andhra Pradesh ,Minister Savita Perumitam ,Agricultural Produce Market Committee ,Srikalahasti, Tirupati district ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...