×

விடுமுறை நாளான நேற்று காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

*4 மணிநேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம்

சித்தூர் : சித்தூரில் பிரசித்திபெற்ற காணிப்பாக்கம் வரசித்திவிநாயகர் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சுமார் 4 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசித்தனர்.
சித்தூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயில்.

இக்கோயிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து அவர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்கின்றனர். இதனால் வரசித்தி விநாயகர் கோயிலில் எப்போதுமே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் அலைமோதினர். மேலும் ஐயப்ப சுவாமி சீசன் காரணமாக அவ்வழியாக செல்லும் பக்தர்கள் வருகையும் நேற்று வழக்கத்தை விட அதிகரித்திருந்தது.

அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும், காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் தரிசித்து சென்றனர். இதனையொட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பக்தர்கள் நீண்டவரிசையில் சுமார் 4 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு மோர், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு கோயில் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும், பக்தர்களின் வருகை அதிகரித்ததால் கோயில் பார்க்கிங் முழுவதும் நிரம்பி சாலையோரங்களில் வாகனங்கள் அணிவகுத்தபடி நின்றன. இதனால் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட கடைகளில் விற்பனை களைகட்டி வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதனிடையே நேற்றுமுன்தினம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் 31 ஆயிரத்து 668 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதில், 684 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

Tags : Kanipakam ,Vinayagar temple ,Chittoor ,Kanipakam Varasithi Vinayagar ,Kanipakam Swayambu Temple ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...