×

டெல்லியில் நாசவேலைக்கு சதி: 2 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

புதுடெல்லி: டெல்லியில் தீபாவளி பண்டிகையின்போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி திட்டம் உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தெற்கு டெல்லியில் உள்ள சாதிக் நகரில் கடந்த 16ம் தேதி சிறப்புப் பிரிவு சோதனை நடத்தியது. அப்போது முகமது அட்னான் கான் என்ற அபு முகாரிப் (19) கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது அவர் தனது கூட்டாளியான மத்திய பிரதேசத்தின் போபாலை சேர்ந்த அட்னான் கான் என்ற அபு முகமது (20) குறித்த தகவல்களை வழங்கினார். அதன் பேரில் மத்திய பிரதேசம் விரைந்து டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார், அம்மாநில போலீசாரின் உதவியுடன் கடந்த 18ம் தேதி போபாலில் அபு முகமதுவை கைது செய்து, டெல்லி அழைத்து வந்தனர்.

விசாரணையின்போது இருவரும் ஐஎஸ்எஸ் பயங்கரவாத அமைப்புடன் தங்களுக்கு இருக்கும் தொடர்பை ஒப்புக்கொண்டனர். சிரியாவை சேர்ந்த ஐஎஸ்எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-குரேஷியின் வழிகாட்டுதலின் செயல்பட்டு வந்தனர். குறிப்பாக மாநிலங்களுக்கு இடையேயான பயங்கரவாத குழுவில் தீவிரமாக இருந்தனர். சமூக வலைத்தளங்களில் பயங்கரவாதம் குறித்த வீடியோக்களை பரப்புவது, பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பது, பிரசார நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது போன்ற வேலைகளை செய்து வந்தனர். இவர்களின் அதீத ஈடுபாட்டை கவனித்த பயங்கரவாத தலைவர் அபு இப்ராஹிம் அல்-குரேஷி, டெல்லியில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு அவர்களை தூண்டினார். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, வெடிகுண்டுகள் தயாரிப்பது உள்பட பயங்கரவாத தாக்குதலுக்கு தேவையான நடவடிக்கைகளுக்காக அவர்களை அபு இப்ராஹிம் அல்-குரேஷி வழி நடத்தினார். தெற்கு டெல்லியில் உள்ள ஒரு பெரிய வணிக வளாகம், மாநகராட்சி பூங்கா போன்ற மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களை தாக்குதலுக்காக அவர்கள் தேர்வு செய்தனர்.பின்னர் அவர்கள் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்காக பொருட்களை வாங்கினர். அபு இப்ராஹிம் அல்-குரேஷியின் வழிகாட்டுதலின் கீழ் அவர்கள் வெடிகுண்டுகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். எனினும் அவர்கள் நாச வேலையை அரங்கேற்றுவதற்கு முன்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர்.டெல்லியில் அபு முகாரிப்பின் வீட்டில் இருந்து பெட்ரோல் குண்டு, வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் டைமர் கடிகாரம் உள்ளிட்ட சாதனங்கள், 3 மொபைல் போன்கள், ஹார்டு டிஸ்க்குகள், ஐஎஸ்ஐஎஸ் கொடி, உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 2 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை கைது செய்ததன் மூலம் டெல்லியில் நடக்க இருந்த மிகப்பெரிய நாசவேலை முறியடிக்கப்பட்டுள்ளது.

யார் இவர்கள்?

*டெல்லியில் கைது செய்யப்பட்ட முகமது அட்னான் உத்தரபிரதேசத்தில் உள்ள எட்டாவைச் சேர்ந்தவர். அவரது தந்தை சலீம் கான் ஒரு ஓட்டுநர் மற்றும் அவரது தாயார் அஞ்சும் கான் ஒரு இல்லத்தரசி. அவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர். உபி மாநிலம் எட்டாவில் 10 ஆம் வகுப்பு முடித்த பிறகு அவரது குடும்பம் 2002ல் டெல்லிக்கு குடிபெயர்ந்தது.

*அபு முகமது மபி மாநிலம் போபாலை சேர்ந்தவர். அவரது தந்தை சலாம் தனியார் நிறுவனங்களில் கணக்காளராகப் பணிபுரிகிறார், அதே நேரத்தில் அவரது தாயார் ஒரு டிவி நடிகை. அவர் போபாலில் 12 ஆம் வகுப்பு முடித்தார்.

Tags : Delhi ,New Delhi ,Diwali festival ,Sadiq Nagar ,south Delhi ,
× RELATED கேள்வி கேட்டதால் ஆத்திரம்; திமுக...