×

ஆர்எஸ்எஸ் முகாமில் 4 வயது முதல் பாலியல் கொடுமை: இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு முன்னாள் தொண்டர் தற்கொலை

 

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள பொன்குன்னம் பகுதியை சேர்ந்தவர் அஜி. இவரது மகன் அனந்து அஜி (24). ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் செயல்பட்டு வந்த இவர் சமீபத்தில் அந்த அமைப்பில் இருந்து விலகினார்.
இவரது தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன் மரணமடைந்தார். அனந்து அஜி பொன்குன்னத்தில் தன்னுடைய தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வீட்டினர் கோட்டயம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில் அனந்து அஜி திருவனந்தபுரத்திலுள்ள ஒரு லாட்ஜில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார். இந்நிலையில் அனந்து அஜியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியானது. இந்த பதிவை அவர் தன்னுடைய மரணத்திற்குப் பின் வெளியாகும் வகையில் டைம் செட்யூல் செய்திருந்தார்.

அதில் கூறியிருந்த விவரங்கள் வருமாறு: என்னுடைய நான்காம் வயதில் தந்தை தான் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்த்தார். அன்று முதல் ஆர்எஸ்எஸ் முகாமுக்கு வருபவர்கள் என்னை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி வந்தனர்.
இதனால் மனரீதியாக நான் கடுமையாக பாதிக்கப்பட்டேன். என்னுடைய தாய் மற்றும் தங்கையை நினைத்துத் தான் நான் இதுவரை தற்கொலை செய்யாமல் இருந்தேன். ஆனால் இப்போது எனக்கு வேறு வழி தெரியவில்லை. என்னைப் போல மேலும் பலர் ஆர்எஸ்எஸ் முகாமில் கொடுமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த அமைப்பில் இருந்து வெளியேறியதால் தான் என்னால் இதை கூற முடிகிறது. என்.எம். என்பவர் தான் என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். என்னுடைய தந்தை தான் என்னை ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்த்தார். பெற்றோர் தங்களது குழந்தைகளை பாசத்துடன் வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அனந்து அஜியின் தற்கொலைக்கு காரணமான ஆர்எஸ்எஸ் அமைப்பினரை கைது செய்ய வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

Tags : RSS ,Thiruvananthapuram ,Aji ,Ponkunnam ,Kerala ,Kottayam ,Anand Aji ,
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக...