×

திருப்போரூர் ஒன்றியத்தில் 50 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: கோவளம் ஊராட்சி தலைவருடன் முதல்வர் உரையாடல்

திருப்போரூர், அக்.12: திருப்போரூர் ஒன்றியத்தில் 50 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், கோவளம் ஊராட்சி தலைவருடன், காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாடினார். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ம்தேதி காந்தி ஜெயந்தி அன்று ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறும். இந்த ஆண்டு அன்றைய தினம் ஆயுத பூஜை என்பதால் ஒத்தி வைக்கப்பட்டு, நேற்று நடந்தது. தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் ஊராட்சிகளில் இணையதள வசதி தொடங்கி வைக்கப்பட்டு, அதன் மூலம் முதலமைச்சர் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் உரையாடினார்.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம், கோவளம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேரடியாக ஊராட்சி மன்ற தலைவருடன் உரையாற்றினார். தமிழ்நாடு அரசின் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் கோவளம் ஊராட்சியில் எத்தனை பேர் பயன் அடைந்துள்ளனர் என்று முதலமைச்சர் கேட்டார். அதற்கு, பதிலளித்த கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் தனது ஊராட்சியில் சுமார் 3 ஆயிரம் பேர் வசிப்பதாகவும், இதில் 1000 பேருக்கு மேல் இந்த திட்டத்தில் பயன்பெற்று, மாதம் ரூ.2500 சேமிப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து, கோரிக்கைகள் ஏதேனும் உள்ளதா? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு, பதிலளித்த ஊராட்சி மன்ற தலைவர் கார்மேல் நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும், குன்றுக்காடு பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கப்பட வேண்டும், கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கேளம்பாக்கம் வரை செல்லும் சாலையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும், என்று கோரிக்கைவிடுத்தார். இவற்றை கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி மனுவாக அதிகாரிகளிடம் கொடுக்குமாறும், அதற்கான நிதி உடனடியாக விடுவிக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூமகள் தேவி, அரிபாஸ்கர்ராவ், திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதேபோன்று, திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய 50 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் சிறப்பாக நடந்தது.

Tags : Gram Sabha ,Thiruporur ,CM ,Kovalam panchayat ,Chief Minister ,M.K. Stalin ,Gandhi ,Jayanti ,
× RELATED ஆவடி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட...