செங்கல்பட்டு, டிச.19: ஆவடி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3.40 கோடி மதிப்பிலான கஞ்சா செங்கல்பட்டில் எரித்து அழிக்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பல்வேறு காவல்நிலையப் பகுதிகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை அழிக்க, காவல் ஆணையர் கி.சங்கர் உத்தரவின்பேரில், ஆவடி காவல் ஆணையரக கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி தலைமையில், துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா, தடய அறிவியல் தறை துணை இயக்குனர் ஷோபியா ஜோசப் ஆகியோர் கொண்ட போதைபொருள் அழிப்பு குழு செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை அழிப்பதற்கு, செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உள்ள கொதிகலனில் நேற்று முன்தினம் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் அழிப்பதற்கு ஆணை பெறப்பட்ட 90 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 510 கிலோ கஞ்சாவை கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி, துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா, ஆவடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆணையர் பொன்சங்கர், ஆய்வாளர்கள் ரமேஷ், சுபாஷினி ஆகியோர் எரித்து அழித்தனர். அதன்படி, கடந்த 2024ம் ஆண்டு 112 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.40 லட்சம் மதிப்பிலான 399 கிலோ கஞ்சா, நடப்பு 2025ம் ஆண்டில் 581 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள 2,892 கிலோ கஞ்சா நேற்று முன்தினம் ஆவடி காவல் ஆணையரகத்தின் சார்பில் செங்கல்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தின் பாய்லரில் எரித்து அழிக்கப்பட்டது. மேலும், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போதையில்லா தமிழ்நாடு கோட்பாட்டை வலியுறுத்தி, அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் சம்பந்தமாக தீவிர சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
