×

வீட்டில் தனியாக இருந்தபோது பயங்கரம் 6 சவரன் நகைகளை திருடி மூதாட்டி படுகொலை

வாலாஜாபாத், டிச.18: வாலாஜாபாத் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை படுகொலை செய்து, 6 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து 2 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாலாஜாபாத் அருகே நத்தாநல்லூர், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் அலங்கார அம்மாள் (85). மூதாட்டியான இவரது கணவர், கடந்த சில வருடங்களுக்கு முன் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். இதில் மகன் திருமணமாகி வாலாஜாபாத்தில் வசித்து வருகிறார். மேலும் ஒரு மகள் உள்ளூரிலும், 3 மகள்கள் வெளியூர்களிலும் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த வீட்டில் மூதாட்டி அலங்கார அம்மாள் மட்டும் தனியே வசித்து வந்தார். இந்நிலையில், உள்ளூரில் வசிக்கும் மகள் மட்டும் தனது தாயாரை அடிக்கடி வந்து பார்த்துவிட்டுச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று காலை அலங்கார அம்மாள் வழக்கம்போல் அன்றாட பணிகளை செய்வதற்கு வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உள்ளூரில் வசிக்கும் மகள் ஆகியோர் அலங்கார அம்மாளின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் முன் அறையில் அலங்கார அம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவரது கழுத்து, காது, மூக்கில் அணிந்து இருந்த நகைகள் மற்றும் பீரோவில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிபோய் கிடந்தன. இதில் பிரோவில் வைத்திருந்த நகை உட்பட சுமார் 6 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், சம்பவ இடத்தை ஆய்வு செய்வதற்கு காஞ்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி சண்முகம், உத்திரமேரூர் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், காஞ்சிபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து மர்ம நபர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

மேலும் நத்தாநல்லூர் ஊராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் பதிவாகிய காட்சிகளை வைத்து மர்ம நபர்கள் நடமாட்டம் குறித்து போலீசார் தீவிமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் அலங்கார அம்மாளை தொடர்ந்து நோட்டமிட்டு வந்ததாகவும், எனவே திட்டமிட்டு இந்த படுகொலை அரங்கேறியதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
தொடர்ந்து, மூதாட்டி அலங்கார அம்மாளின் சடலத்தை போலீசார் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அலங்கார அம்மாளின் மகன் அளித்த புகாரின்பேரில், வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 தனிப்படைகள் அமைத்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Shavran ,Walajabad ,Valajabad ,Nathanallur, Bharatiyar Street ,
× RELATED ஆவடி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட...