×

ஆலங்குளம் அருகே பரபரப்பு நிதி நிறுவனம் நடத்தி 200 பேரிடம் ரூ.1 கோடி மோசடி?

*பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை

ஆலங்குளம் : ஆலங்குளம் அருகே புதுப்பட்டியில் நிதி நிறுவனம் நடத்தி 200 பேரிடம் ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்டதாக கூறி பாதிக்கப்பட்ட பெண்கள் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதுப்பட்டியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று சுமார் 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

இதில் புதுப்பட்டி, காசிநாதபுரம், மருதம்புத்தூர், உடையாம்புளி கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், பீடி சுற்றும் தொழிலாளிகள் என நூற்றுகணக்கானோர் தங்களது அவசர பணம் தேவைகளுக்காக தங்களது நகைகளை அடகு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் சிலர் அடகு வைத்த நகைகளை மீட்க பணம் செலுத்தியுள்ளனர். ஆனால் அவர்களிடம் நகையை ஒப்படைக்காமல் அந்நிறுவனத்தினர் காலம் தாழ்த்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக நிதி நிறுவனம் திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நிதி நிறுவன அதிபரை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பணம் செலுத்திய பலருக்கு நகை திரும்ப தராத நிலையில் சுமார் 200 பேரிடம் சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் மோசடி நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆலங்குளம் காவல் நிலையம் முன்பு நேற்று திரண்டனர். அப்போது அங்கிருந்த போலீசார் இந்த மோசடி தொடர்பாக தென்காசி எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்குமாறு தெரிவித்தனர்.

அதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்ற பொதுமக்கள் தென்காசி மாவட்ட எஸ்பி அரவிந்த்திடம் புகார் மனு அளித்தனர். தொடர்ந்து இன்று (அக்.7) பொருளாதார குற்றப்பிரிவிலும் மனு அளிக்க போவதாக புதுப்பட்டியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் கூறினார்.

Tags : Bharappu Financial Company ,Alankulam ,Station ,Alankulam Police Station ,Pudupatti ,Tenkasi District Alankulam ,
× RELATED ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது