×

வீடு கட்டி தருவதாக கூறி சேலம் ஆசிரியரிடம் மோசடி

புதுச்சேரி, செப். 30:சேலம் அழகாபுரம் தோப்புக்காட்டில் வசித்து வருபவர் வின்சென்ட் தே.பால் (58). தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலத்தில் பெரமனூர் நேருநகரில் வீடு ஒன்றை கட்டுவதற்கு முடிவு செய்தார். இவரது உறவினரான புதுச்சேரி மாநிலம் காரைக்கால் ஜீவானந்தம் தெருவை சேர்ந்த இன்ஜினியர் எடிசன் ரொனால்ட் ஜவகர் (39) என்பவர் வீட்டை கட்டித்தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய ஆசிரியர் வின்சென்ட், வங்கியில் கடனை பெற்று பணத்தை வழங்கினார். ரூ.1.23 கோடி செலவில் வீடு கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ரூ.89 லட்சம் கொடுக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்கவில்லை. இதுகுறித்து வின்சென்ட் கேட்டபோது, மேலும் பணம் கொடுத்தால் வேலையை செய்வேன் என கூறியதுடன், அவருக்கு மிரட்டல் விடுத்து அடிக்கவும் பாய்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வின்சென்ட், சேலம் பள்ளப்பட்டி போலீஸ் ஸ்ேடசனில் புகார் செய்தார்.

மேலும் தரமில்லாத பொருட்களை கொண்டு கட்டப்பட்ட வீட்டிற்கு குறைவாகத்தான் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியதையடுத்து, காவல்துறை மூலமாக வீட்டிற்கான செலவு எவ்வளவு என இன்ஜினியர்கள் சங்கத்தின் சார்பில் மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் ரூ.61 லட்சம் அளவுக்கு தான் வீடு கட்டப்பட்டுள்ளது என அறிக்கை வழங்கப்பட்டது. இதையடுத்து ரூ.28 லட்சத்தை திரும்ப தர வேண்டும் எனவும் ஆசிரியர் புகாரில் கூறியிருந்தார். இது தொடர்பாக காரைக்கால் இன்ஜினியர் எடிசன் ரொனால்ட் ஜவகர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Salem ,Puducherry ,Vincent De.Paul ,Alagapuram grove ,Peramanur Nehrunagar ,
× RELATED ஓய்வூதியர் தின விழா