×

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: மழை நீடிக்கும்

சென்னை:வடக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது.

வெப்பநிலையில் ஏதும் பெரிய மாற்றம் இல்லலை என்றாலும், ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகமாக காணப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. கரூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும், அதிகரித்து காணப்பட்டது.

தர்மபுரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை குறைந்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மதுரையில் நேற்று 100 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல்- மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டது. இது இன்று வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், மத்திய மியான்மர் கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது மேற்கு திசையில் நகர்ந்து நாளைய தினம், தெற்கு ஒடிசா- வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வட மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு ஒடிசா- வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் 27ம் தேதி கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  மேற்கண்ட வானிலை அமைப்பின் காரணமாக நேற்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்துது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. இதேநிலை 26, 27ம் தேதியும் நீடிக்கும் என்பதால் அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையைப் பொருத்தவரையில் 28ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரியை ஒட்டி இருக்கும். இது தவிர, தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் 28ம் தேதி வரை வீசும். மேலும், தெற்கு-மத்திய- வடக்கு வங்கக் கடலின் அனேக பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் 28ம் தேதி வரை வீசும். அதனால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Tags : Chennai ,central Bay of Bengal ,Coimbatore district ,Nilgiris district ,Tamil Nadu ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு