மும்பை: பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களைக் கடுமையாக விமர்சித்துள்ள சிவசேனாவின் சாம்னா நாளிதழ், நாட்டில் நிலவும் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளையொட்டி, நாடு முழுவதும் பாஜகவினர் 15 நாட்கள் ‘சேவா பக்வாடா’ என்ற பெயரில் சேவை வாரத்தைக் கொண்டாடி வருகின்றனர். இந்தச் சூழலில், சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேட்டின் தலையங்கத்தில் பிரதமர் மோடியையும், அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்களையும் கடுமையாகத் தாக்கி எழுதியுள்ளது.
அதில், ‘மோடியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால், மக்கள் கொண்டாடும் அளவுக்கு நாட்டில் தூய்மையான சூழல் நிலவுகிறதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். கடந்த 11 ஆண்டுகளாகப் பிரதமராக இருக்கும் மோடியும் அவரது ஆதரவாளர்களும், நாட்டுக்கு என்ன செய்துள்ளோம் என்பதைச் சிந்திக்க வேண்டும். நாட்டில் 80 கோடி மக்களுக்கு மாதம் 10 கிலோ இலவச தானியம் வழங்குவதைப் பிரதமர் பெருமையாகக் கூறிக்கொள்கிறார். இது, 140 கோடி மக்கள் தொகையில் 80 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வதையே காட்டுகிறது. எதிர்க்கட்சிகள் மோடியின் பிறந்தநாளை ‘வேலையில்லா திண்டாட்ட நாளாக’ கொண்டாடப் பரிந்துரைக்கின்றன.
ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக மோடி உறுதியளித்தார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்குக் கூட வேலை கிடைக்கவில்லை. அதேசமயம், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா ஒரே நாளில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக்கப்பட்டு, பல கோடி ரூபாய் நிதி அவர் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. பிரதமரின் நண்பர் கவுதம் அதானி தொட்ட நிலமெல்லாம் அவருக்கு இலவசமாக வழங்கப்பட்டது. விமான நிலையங்கள், அரசு நிறுவனங்கள், நிலங்கள் அதானிக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளன’ என்று சரமாரியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
