×

ரசிகர்கள் கூட்டம் வாக்காக மாறாது ஒரு தொகுதியில் கூட விஜய் கட்சி வெற்றி பெறாது: ராஜேந்திரபாலாஜி கணிப்பு

 

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, நேற்று அளித்த பேட்டி: எம்ஜிஆரின் படத்தை பயன்படுத்தக்கூடிய அருகதை உள்ள கட்சி அதிமுக மட்டும் தான். புதிதாக வரக்கூடிய கட்சிகள் எம்ஜிஆர் படத்தை போட்டுக்கொண்டு அவரது செல்வாக்கை திருடப் பார்க்கிறார்கள். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள். விஜய்க்கு கூடுவது ரசிகர்கள் கூட்டம். அது வாக்காக மாற வாய்ப்பே இல்லை. திரை நட்சத்திரங்கள் யாராக இருந்தாலும் அவர்களை பார்ப்பதற்கு ஒரு பெரும் கூட்டம் கூடும். அது கட்டுக்கோப்பான கூட்டம் கிடையாது. காட்டாறு போல் ஓடக்கூடிய கூட்டம். விஜய் தலைமையில் 3வது அணி அமைக்கலாம். ஆனால் அது வெல்வதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு கிடையாது. களத்தில் திமுக, அதிமுக இரு கட்சிகள் மட்டும் தான்.

ஒருங்கிணைப்பு, ஒருங்கிணைப்பு என்று பேசாதீர்கள். எடப்பாடி பழனிசாமி பின்பு தான் இயக்கம் இருக்கிறது என்று எல்லா நீதிமன்றங்களும் கூறிவிட்டது. எடப்பாடி ரோடு ஷோ செல்கிறார். எங்கேயாவது ஒரு பிரச்னை நடந்தது உண்டா? வாரத்திற்கு ஒரு நாள் மக்களை சந்திக்கும் விஜய், அவரது ரசிகர்கள் ஏர்போர்ட்டில் இருக்கும் பேரிகார்டை உடைப்பது, அத்துமீறுவது என்பது அநாகரிகமான செயல். விஜய்க்கு ஒரு இயக்கத்தை நடத்தக்கூடிய திறமை கிடையாது. ஏதோ வந்தார்கள், ஆட்டம் போட்டார்கள், சென்றார்கள் என்று தான் அரசியல் வாழ்வு இருக்கும். வென்றார்கள் என்ற வாய்ப்பே இருக்காது.

விஜய்யிடம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் படைத்தளபதி இல்லை. ஒரு இயக்கத்தை ஆரம்பித்து அதை கட்டுக்கோப்பாக கொண்டு செல்வதற்கு பக்குவமோ, பாடசாலையோ இல்லை. பக்குவப்பட்டு பல களங்கள் கண்டு, அதற்குப் பின்பு தான் தேர்தலில் வெல்வார்களா? வீழ்வார்களா? என்று கணக்கு போட முடியும். இப்போது இவர்கள் தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை சந்திப்பார்கள். இவ்வாறு தெரிவித்தார்.

 

Tags : Vijay ,Rajendra Balaji ,Sivakasi ,Former ,AIADMK ,Minister ,K.T. Rajendra Balaji ,Sivakasi, Virudhunagar district ,MGR ,
× RELATED பெருந்துறையில் விஜய் இன்று பிரசாரம்:...