×

தமிழக பாஜ தலைவர்கள் டெல்லி பயணம் ஏன்? மாநில தலைவர் நயினார் பேட்டி

சென்னை: தமிழக பாஜ தலைவர்கள் ஒட்டுமொத்தமாக டெல்லிக்கு பயணம் செய்தது ஏன் என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார். தமிழ்நாடு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று முன்தினம் இரவு, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: டெல்லியில் நடந்த குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள எச்.ராஜா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் அனைவரும் டெல்லி சென்றிருந்தோம். நாங்கள் அதற்காகவேதான் டெல்லி சென்றோம். திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டிற்கு, அரசு பஸ்களையே இயக்கினார்கள். ஆனால் நமக்கு பேருந்துகளுக்கு தடை விதிப்பதோடு, கொடிகள், பேனர்கள் கட்டவும் தடை செய்கின்றனர். ஆனால் காங்கிரஸ், விசிக கட்சிகளுக்கு பேனர், கொடிகள் கட்ட அனுமதி அளிக்கின்றனர். அதோடு அவர்கள் குறித்து பேஸ்புக், டிவிட்டர் போன்றவைகளில் விமர்சனம் செய்தால், உடனடியாக அவ்வாறு போட்டவர்களை கைது செய்து, வேலூர், கடலூர் சிறைகளில் அடைகின்றனர்.

பாஜ தினம் தினம் மக்களை சந்தித்து கொண்டு இருக்கிறது. பிரதமர் மோடி 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைக்கிறார். உள்துறை அமைச்சரும் அதேபோல் உழைக்கிறார். அப்படி இருக்கையில் அடுத்தவர் (விஜய்) எந்த கிழமையில் பிரசாரம் செய்ய செல்கிறார் என்பது குறித்து கருத்து கூற முடியாது. இளையராஜா பாராட்டு விழா குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் அந்த பாராட்டு விழாவில் அனைவரும் கலந்து கொள்ளலாம். நடிகர் விஜய் வேட்டைக்கு வரும் சிங்கம் இல்லை. வேடிக்கை காட்ட வரும் சிங்கம் என்று சீமான் பேசியுள்ளது குறித்து, அவரிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

* ‘கூட்டணியில் மாற்றம் இருக்கும்’
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜ சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. இதில், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாஜ சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில், ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. என்டிஏ கூட்டணியை பொறுத்தவரை சர்ச்சை என கூற முடியாது. அனைத்து கூட்டணி கட்சிகளும் ஒழுங்காக இருப்பதும் கிடையாது.

ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருக்கும். இன்னும் தேர்தலுக்கு 8 மாதங்கள் இருக்கின்றன. கூட்டணிகளில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும். தமிழகத்தில் அடுத்த ஆட்சி எங்களுடைய கூட்டணி ஆட்சிதான். ஓ.பன்னீர்செல்வத்துடன் பேசி தான் வருகிறேன். ஆகவே இறுதியில் நல்ல முடிவு வரும். தொண்டாமுத்தூர் நிலம் விவகாரத்தில் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். விஜய் இன்று பரப்புரை ஆரம்பித்திருக்கிறார். அவருடைய கருத்துகளை அவர் பதிவு செய்கிறார். எங்களை விமர்சனம் செய்வதற்கான அவசியம் அவருக்கு இல்லை’’ என்றார்.

Tags : Tamil Nadu ,BJP ,Delhi ,Nainar ,Chennai ,president ,Nainar Nagendran ,Tamil Nadu BJP ,Air India ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்