திருச்சி: தவெக தலைவர் நடிகர் விஜய் திருச்சியில் இன்று தனது பிரசார சுற்று பயணத்தை துவக்குகிறார். இந்த பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (13ம்தேதி) திருச்சி செல்கிறார். காலை 10.35 மணியளவில் மரக்கடை, எம்ஜிஆர் சிலை அருகே நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொண்டு விஜய் பேசுகிறார். திருச்சியில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு காரில் செல்லும் விஜய், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
முதலாவதாக அரியலூர் பஸ் நிலையம் அண்ணாசிலை அருகே மதியம் 1 மணி முதல் 3 மணி வரை பிரசாரம் மேற்கொள்ளும் விஜய் அங்கிருந்து கல்லங்குறிச்சி பிரிவு சாலை புறவழிச்சாலை ரவுண்டானா, செந்துறை ரோடு புறவழிச்சாலை ரவுண்டானா வழியாக பெரம்பலூர் செல்கிறார். குன்னம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மாலை 4 மணி, தொடர்ந்து பெரம்பலூர் நகரில் துறையூர் சாலையில் உள்ள மேற்கு வானொலி திடலில் மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த பிரசாரத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் திருச்சி விமான நிலையம் வரும் விஜய், அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார். ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொள்ள உள்ள விஜய், அடுத்த வாரம் (20ம் தேதி) சனிக்கிழமை திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
