×

மாட வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

திருவண்ணாமலை, செப்.13: திருவண்ணாமலை மாட வீதியில் நவீன தரத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியை கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தும் பணியின் முதற்கட்டமாக, பே கோபுர வீதி மற்றும் பெரிய தெரு பகுதியில் சுமார் 1 கி.மீ. தூரம் சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதன்தொடர்ச்சியாக, தேரடி வீதியில் காந்தி சிலை தொடங்கி திருவூடல் தெரு திரவுபதி அம்மன் கோயில் சந்திப்பு வரை தார் சாலையை அகற்றிவிட்டு நவீன தரத்தில் 1.07 கி.மீ தூரம் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்பணியை சமீபத்தில் ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அடுத்த மாதம் இறுதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதையொட்டி, இரவு பகலாக பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. மேலும், 80 சதவீத பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். காந்தி சிலை சந்திப்பு தொடங்கி, திரவுபதி அம்மன் கோயில் வரை ஆய்வு பணியை மேற்கொண்ட கலெக்டர், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். குறிப்பாக, தேர் நிலை நிறுத்தப்படும் பகுதியில் நடைபெறும் பணிகளை பார்வையிட்ட கலெக்டர், போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Dharbagaraj ,Mada Road, Tiruvannamalai Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Mada Road, Tiruvannamalai ,Mada Road of ,Tiruvannamalai Annamalaiyar Temple ,Bay Gopuram Road ,Big… ,
× RELATED ஊர்நாட்டாண்மை கொலை தலைமறைவான 2 பேர்...