ஊத்துக்கோட்டை, செப்.12: ஊத்துக்கோட்டை அருகே, கிருஷ்ணா கால்வாயில் ராட்சத மோட்டார் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் உறிஞ்சும் ஆந்திர விவசாயிகளால் ஜீரோ பாயின்ட்டில் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி 15 டிஎம்சி தண்ணீர் ஆந்திர அரசு வழங்க வேண்டும். இதில், 3 டிஎம்சி சேதாரம் போக, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் என 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.
ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் திறக்க வேண்டிய தண்ணீரை தமிழகத்திற்கு திறக்காததால், தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கடிதம் எழுதினர். இதையடுத்து, தமிழக அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர், கண்டலேறுவில் திறக்கப்பட்ட தண்ணீர் 152 கி.மீட்டர் கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்ட்டிற்கு கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி வந்தடைந்தது.
இந்நிலையில், கண்டலேறு அணையில் தற்போது 1,000 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டிற்கு கடந்த 7ம் தேதி 377 கன அடியாகவும், 8ம் தேதி 328 கன அடியாகவும், 9ம் தேதி 308 கன அடியாகவும் குறைந்து வந்தது. பின்னர், மீண்டும் 10ம் தேதி 316 கன அடியாகவும், 11ம் தேதி 320 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஆந்திர பகுதி விவசாயிகள்.
ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட் அருகே, ஆந்திர பகுதியான கண்டிகை, ஆம்பாக்கம், சிறுவனம்புதூர், மதனம் பேடு, மதனஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள ஆந்திர விவசாயிகள், ராட்சத மோட்டார் மூலம் கிருஷ்ணா கால்வாயில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீரை இரவு பகல் பாராமல் உறிஞ்சி, நாற்று நடவும், பயிர்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். இந்த தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்தும், ஆந்திர விவசாயிகள் இதனை கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக ஜீரோ பாயின்ட்டில் தண்ணீர் குறைந்தும், அதிகரித்தும் வருகிறது. ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர விவசாயிகள் தண்ணீர் உறிஞ்சுவதை தடுத்து நடவடிக்கை எடுப்பார்காளா என தமிழக விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
