×

கஞ்சா புகைப்பதை தட்டி கேட்டதால் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் அதிரடி கைது

அம்பத்தூர், டிச.19: போரூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(35). திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரபாகரனின் மனைவி கோபித்துக் கொண்டு முகப்பேர் கிழக்கு, வேணுகோபால் சாமி தெருவில் உள்ள தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில், மனைவியை பார்க்க நேற்று முன்தினம் இரவு வேணுகோபால் தெருவில் உள்ள மாமியார் வீட்டிற்கு பிரபாகரன் சென்றார். அப்போது, மாமியார் வீட்டின் அருகே கஞ்சா புகைத்து கொண்டிருந்த சிலரை தட்டிக்கேட்டு விரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் பிரபாகரனை சரமாரியாக தாக்கினர். மேலும், மாமியார் வீட்டின் மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். நொளம்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், முகப்பேர் மேற்கு, பஜனை கோயில் தெருவை சேர்ந்த மார்ட்டின்(22), வேணுகோபால் தெருவை சேர்ந்த 15 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேர் கும்பல் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உதவி கமிஷனர் பிரம்மானந்தம் தலைமையிலான தனிப்படை போலீசார் மார்ட்டினை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிறுவன் உள்பட 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Prabhakaran ,Porur ,Venugopal Samy Street, Mukapere East… ,
× RELATED பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பாதை...