ஊத்துக்கோட்டை, டிச. 17: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பேவர் பிளாக் சாலையில் மழைநீர் கால்வாய் அமைத்து மூன்று தாடங்களாகியும் அதற்கு மூடி அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகளில் வியாபாரிகள், விவசாயிகள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், 14வது வார்டில் செட்டி தெரு பின்புறம் உள்ள தெருவில் சாலை இல்லாமல் குண்டும், குழியுமாக காணப்பட்டது. ஆகையால், இப்பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில், பேரூராட்சி சார்பில் 15வது நிதிக்குழு மூலம் ₹12 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அந்த பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. அத்துடன் சாலையின் மையப்பகுதியில் மழைநீர் கால்வாயும் அமைக்கப்பட்டது. ஆனால், கால்வாயின் மையப்பகுதியில் மழைநீர் செல்வதற்கு 10 இடங்களில் மழைநீர் வடிகட்டி (பள்ளம்) அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சாலை போடப்பட்டு 3 மாதங்களாகியும் இதுவரை பள்ளத்தை மூடி போட்டு மூடவில்லை. எனவே, சம்மந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்தினர் சாலையின் நடுவில் உள்ள பள்ளத்தில் மூடி அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து 12வது வார்டு கவுன்சிலர் சுமலதா நரேஷ் மற்றும் அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைத்து 3 மாதங்கள் ஆகிறது. ஆனால், அந்த சாலையின் நடுவில் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாயில் மேல் மூடி அமைக்கவில்லை. இதனால், இரவில் வீட்டிற்கு செல்பவர்கள் இந்த பள்ளத்தில் விழுந்து காயமடைகிறார்கள். எனவே, சம்மந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்தினர் சாலையின் நடுவில் உள்ள மழைநீர் கால்வாயின் பள்ளத்தில் மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
