திருத்தணி, டிச.17: திருத்தணி முருகன் கோயிலில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதத்தை நேற்று முதல் தொடங்கினர். பிப்ரவரி 1 தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, முருக பக்தர்கள் முருக மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து அறுபடைகளில் முருகப்பெருமானை தரிசிப்பது வழக்கம். அதன்படி, ஏராளமான பக்தர்கள் நேற்று அதிகாலை முருகன் கோயிலில் தைப்பூச மாலை அணிந்தனர். தொடர்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர். இளைஞர்கள் உள்பட ஏராளமானோர் தைப்பூச மாலை அணிந்து விரதம் தொடங்கி இருப்பதால், முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், முருகப்பெருமானை தரிசிக்க உகந்த நாளான செவ்வாய்க்கிழமை என்பதால் நேற்று அதிகாலை முதலே முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மார்கழி மாதம் முதல் நாள் அதிகாலை பெண்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர். பெருமாள் கோயில்களில் ஏராளமானோர் அதிகாலை தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். மார்கழி தொடங்கிய நிலையில் பஜனை குழுவினர் வீதிகளில் திருப்பாவை, திருவெம்பாவை பக்தி பாடல்கள் பாடியவாறு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
