மதுரை: அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என நினைக்கக்கூடாது என அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார். மதுரை, சோலை அழகுபுரம், பழங்காநத்தம் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிகளை நேற்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தின் போது பதிவுத்துறையில் ஒரு பத்திரம் பதிவதற்கு 10% பணம் பெறப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். பொதுமக்கள் மட்டுமின்றி, அவர்களது கட்சி சார்ந்தவர்களும் பத்திரங்களை பதியத்தான் செய்கிறார்கள். எந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்து சதவீதம் லஞ்சம் பெறப்படுகிறது என்பதை அவர் கூற வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறையில் எந்தெந்த இடத்தில் எவ்வளவு ஊழல்கள் நடைபெற்றது என்பதை என்னால் கூற முடியும். ஆனால் சிபிஐ வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், அது குறித்து விரிவாக கூற விரும்பவில்லை.
அவர்களின் ஆட்சியில் எந்த வருடம், எந்தெந்த இடங்களில் பத்திரப் பதிவில் முறைகேடுகள் நடைபெற்றது என்பது குறித்த விபரங்கள் என்னிடம் இருக்கிறது. திமுக ஆட்சியில் எந்த நிலமும் முறைகேடாக பதிவு செய்யப்படவில்லை. எந்த ஒரு சார் பதிவாளர் தவறு செய்திருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டினாலும், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக, எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது. தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில் கடந்த 4ம் தேதி ஒரே நாளில் ரூ.274 கோடி அளவிற்கு பத்திரப்பதிவு நடந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பதிவுத்துறையில் ஆண்டு வருமானம் ரூ.8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் கோடி மட்டுமே. திமுக அரசு வந்த பிறகு, பதிவுத்துறையில் கடந்த ஆண்டு ரூ.24 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இந்த ஆண்டு 26 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும். இவ்வாறு கூறினார்.
