×

வெளியேற்றப்பட்டவர்கள் கூடி எடப்பாடியை நீக்குவோம்: செங்கோட்டையனை சந்தித்த பின் புகழேந்தி ஆவேசம்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, நேற்று அவரது இல்லத்தில் பெங்களூரு புகழேந்தி சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜெயலலிதா, எம்ஜிஆரை விட பெரிய தலைவர் என்று எடப்பாடி நினைக்கிறார். செங்கோட்டையன் சிரித்த முகத்துடன் இருக்கின்றார். தான்தோன்றித்தனமாக முடிவெடுக்கும் மனிதராக பழனிசாமி இருக்கிறார். ஜெயலலிதா, செல்லப்பிள்ளையாக செங்கோட்டையனை வைத்திருந்தார். அவரை கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறார். ஜெயலலிதா தான் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர். அவரையே தூக்கி எறிந்து விட்டு சர்வாதிகாரியாக செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையன் வரும் போது நாய் குட்டி போல் அவர் பின்னால் ஓடி வந்தவர் தான் எடப்பாடி. பணம் வந்த பிறகு திமிர் வந்துவிட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத தலைவராக வந்து கட்சியை நாசப்படுத்தி கொண்டிருக்கிறார். அவரை கட்சி நிர்வாகிகள் ஏற்கவில்லை, தொண்டர்கள் ஏற்கவில்லை. எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களில் பணமும், பிரியாணியும் கொடுக்கிறார். அதனால், கூட்டம் கூடுகிறது. கட்சியின் முதலாளி எடப்பாடி பழனிசாமி அல்ல. அவர் ஒரு கைக்கூலி, அவர் கட்சியை விட்டு யாரையும் நீக்குவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் இணைந்து செங்கோட்டையனை செயல்படுவதற்காக அழைப்பு விடுத்துள்ளோம். முன்னாள் அமைச்சர்கள் 10-15 பேர் தொடர்ந்து எங்களுடன் தொடர்பில் உள்ளனர். சசிகலா, ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் அனைவரும் ஒன்றாக ஒரு இடத்தில் சந்தித்து பேச வேண்டும் என்பது என் ஆசை. நூறு சதவீதம் அதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இதை செங்கோட்டையனிடம் பேசி உள்ளேன். தங்கமணியும் வேலுமணியும் இணைந்து இயக்கும் ரோபோ தான் எடப்பாடி பழனிசாமி. வெளியேற்றப்பட்டவர்கள் நாங்கள் கூடுவோம், எடப்பாடி பழனிசாமியை நீக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Edappadi ,Pugazhendi ,Sengottaiyan ,minister ,Bengaluru ,Jayalalithaa ,MGR ,
× RELATED யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை...