×

திருவண்ணாமலை விளையாட்டு அரங்கில் வரும் 9ம் தேதி மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டி; மாநிலத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் தகவல்

திருவண்ணாமலை, செப். 2: திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டிகள் வரும் 9ம் தேதி நடைபெறுகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு மாநில தடகளச் சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்ட இளையோர் தடகளப்போட்டிகள் – 2025 திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத்தால், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் வரும் 9ம் தேதி காலை 8.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இப்போட்டியில், 14 வயது, 16 வயது, 18 வயது மற்றும் 20 வயது பிரிவுகளில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும். ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், தடை தாண்டுதல், மும்முறை தடை தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது.போட்டியில் பங்கேற்கும் மாணவ – மாணவிகள், இரண்டு தனி நபர் போட்டிகளில் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் (நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலரிடம் பெறப்பட்டது) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வயது உறுதிப்படுத்துவதற்கான சான்றாக அளிக்க வேண்டும்.

போட்டியில் பங்கு பெறும் மாணவ -மாணவிகள் தங்களது நுழைவுப் படிவத்தினை இணையவழி மூலமாக entrytvm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நாளை (8ம்தேதி) மாலை 6 மணிக்குள் அளிக்க வேண்டும். நேரடியாக சமர்பிக்கப்படும் நுழைவுப் படிவங்கள் ஏற்றுக்கெள்ளப்பட மாட்டாது. போட்டியில் வெற்றிபெறும் வீரர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.மேலும், மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Tiruvannamalai Sports Hall ,State Vice President ,E.V.V.Kampan ,Tiruvannamalai ,Tiruvannamalai District Sports Hall ,Tamil Nadu State Athletics Association ,Vice President ,Tiruvannamalai District Youth Athletics Competitions ,
× RELATED ஊர்நாட்டாண்மை கொலை தலைமறைவான 2 பேர்...