×

2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கே மாபெரும் வெற்றி: இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தகவல்

* லோக்சபா தேர்தல் இப்போது நடந்தாலும் 36 தொகுதிகளில் வெல்லும்
* விஜய்யின் அரசியல் வருகை திமுகவிற்குதான் சாதகம்

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கே மாபெரும் வெற்றி கிடைக்கும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இப்போது மக்களவை தேர்தல் நடந்தாலும் 48 சதவீதம் வாக்குகள் பெற்று 36 தொகுதிகளில் வெல்லும் எனவும், விஜய்யின் அரசியல் வருகை திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கிவிட்டதை காண முடிகிறது.

பல்வேறு கட்சிகளும் தேர்தல் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி ஒரு பக்கமும், அதிமுக-பாஜ தலைமையிலான ‘தேசிய ஜனநாயக கூட்டணி’ மறுபுறமும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பல திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றன. அதேபோல், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் முதல் முறையாக தேர்தலை சந்திப்பதற்கு களம் காண தயாராகி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் தற்போது மக்களவை தேர்தல் நடந்தால் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கக்கூடும் என இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் ஆகியவை இணைந்து ‘மூட் ஆப் தி நேஷன்’ என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு நடத்தின. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

அதன்படி, கடந்த மக்களவை தேர்தலில் 47 சதவீதம் பெற்றிருந்த திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கடந்த பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 52 சதவீதமாக உயர்ந்திருந்த நிலையில் தற்போது 4 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனாலும், இப்போது நாடாளுமன்ற தேர்தல் நடத்தினாலும் 36 தொகுதிகள் (48%) வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிமுக – பாஜ கூட்டணி வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்ட போது மொத்தமாக 41% வாக்குகளை பெற்றிருந்தன.

பிப்ரவரியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இக்கட்சிகளின் வாக்கு சதவீதம் 21% இருந்த நிலையில் தற்போது அதிமுக – பாஜ கூட்டணி வைத்துள்ளதால் இப்போது தேர்தல் நடந்தால் 37% வாக்கு சதவீதம் இருக்கும் என ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. வாக்கு சதவீதம் அதிகரித்தாலும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெறக்கூடும் எனவும், இதனால் இக்கட்சிகள் இன்னும் மக்களை முழுமையாக சென்றடைய பலகட்ட முயற்சிகளை எடுக்க வேண்டும் எனவும் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2024 நாடாளுமன்ற தேர்தலில் 12 சதவீதமாக இருந்த பிற கட்சிகளின் வாக்கு வங்கி, பிப்ரவரி மாதத்தில் 7% ஆக சரிந்ததாகவும், தற்போது தவெக களமிறங்கிய நிலையில், நாம் தமிழர் உள்ளிட்ட பிற கட்சிகளின் வாக்கு சதவீதம் 15 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, திமுக கூட்டணிக்கு வாக்குகள் சற்று சரிந்திருந்தாலும் விஜய்யின் வருகை 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு உதவிகரமாக இருக்கும் என்றும் இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவை பொறுத்தவரை இன்று தேர்தல் நடைபெற்றால் 324 தொகுதிகளில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 208 தொகுதிகளில் மட்டுமே இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

Tags : DMK alliance ,2026 Tamil Nadu Assembly elections ,India Today ,Lok Sabha ,Vijay ,DMK ,Chennai ,2026 Assembly elections ,Lok Sabha… ,
× RELATED முதல்வர் மாற்றம் விவகாரம்; நானும்...