×

தவெக மாநாட்டில் ரசிகர் தூக்கி வீசப்பட்ட விவகாரம் விஜய் மீது 3 பிரிவில் வழக்குப்பதிவு: தமிழக அரசியலில் பரபரப்பு

திருமங்கலம்: தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டதில் காயமடைந்த ரசிகர் கொடுத்த புகாரின் அடிப்படையில், விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அருகே பாரபத்தியில் கடந்த 21ம் தேதி தவெக 2வது மாநில மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற விஜய், ராம்ப்வாக் நடைமேடையில் சென்றவாறே தொண்டர்கள், ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.

அப்போது ஆர்வ மிகுதியில் சில இளைஞர்கள் உயரமான ராம்ப்வாக் நடைமேடையில் ஏறி அவருக்கு மாலை போடவும், வாழ்த்து தெரிவிக்கவும் சென்றனர். அப்போது விஜய் பாதுகாப்புக்காக வந்த பவுன்சர்கள், மேலே ஏறிய ரசிகர்களை தடுத்தனர். சிலரை அலேக்காக தூக்கி கூட்டத்தில் வீசினர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலர் இதனை கண்டித்திருந்தனர். அவ்வாறு தூக்கி வீசப்பட்டவர்களில் ஒருவர், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே பெரியம்மாபாளையத்தை சேர்ந்த சரத்குமார்(24). விஜய் ரசிகர் மற்றும் தவெக தொண்டரான இவர், நேற்று முன்தினம் தாய் சந்தோஷத்துடன், பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகாரில், மதுரையில் நடந்த தவெக மாநாட்டிற்கு கடந்த 21ம் தேதி சென்றேன்.

அப்போது விஜய் ரேம்ப்வாக் சென்றபோது நடைமேடையில் ஏறினேன். அப்போது விஜயுடன் வந்த பவுன்சர்கள் தூக்கி வீசியதில், மார்பு, வலது விலா எலும்பு ஆகியவற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சி தலைமை பேசுவதாக கூறி, என்னிடம் தவெக பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் சமரசம் பேசினர். ஆனால், எனக்கு எந்தவிதமான முதலுதவியும் அளிக்க முன்வரவில்லை. தற்போது நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வருகிறேன். எனவே தவெக தலைவர் விஜய் மீதும், பாதுகாப்பு குண்டர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். இதுதொடர்பாக குன்னம் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

சம்பவம் நடந்த இடம் மதுரை அருகே பாரபத்தி என்பதால், இந்த புகாரினை குன்னம் போலீசார், பாரபத்தி அருகே அமைந்துள்ள கூடக்கோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றி நேற்று அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக நடிகர் விஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது, 296பி (பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல்), 115/2 (காயம் ஏற்படுத்தும் நோக்கில் தாக்குதல் நடத்துதல்), 189/2 (சட்டவிரோதமாக அதிக கூட்டம் சேர்த்தல்) ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து கூடக்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாநாட்டில் பவுன்சர்களால் ரசிகர் தூக்கி வீசப்பட்ட விவகாரத்தில், விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Vijay ,Thaveka ,Tamil Nadu ,Thirumangalam ,Parapathi ,Madurai… ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்