அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் 2 யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டங்கள் உட்பட 7 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். தனது தங்கை செரீனா வில்லியம்ஸ் ஓய்வு பெற்ற பிறகும், வீனஸ் 45 வயதிலும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
சிறப்பு அனுமதி மூலம் யுஎஸ் ஓபனில் விளையாடும் வாய்ப்பை வீனஸ் பெற்றார். இந்நிலையில் நேற்று நடந்த முதல் சுற்றில் வீனஸ் (602வது ரேங்க்), செக் குடியரசு வீராங்கனை கரோலினா முகோவா (29 வயது, 13வது ரேங்க்) உடன் மோதினார். அதில் கரோலினா 2 மணி நேரம் போராடி 6-3, 2-6, 6-1 என்ற செட்களில் வீனசை வீழ்த்தினார்.
