பாங்காக்: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் நேற்று, இந்திய வீராங்கனை தேவிகா சிஹாக் அபார வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். தாய்லாந்தின் பாங்காக் நகரில் தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை தேவிகா சிஹாக், தாய்லாந்து வீராங்கனை சுபனிதா கேததாங் உடன் மோதினார். இரு செட்களிலும் பம்பரமாய் சுழன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவிகா 21-19, 21-18 என்ற நேர் செட்களில் அபார வெற்றி பெற்றார்.
இதையடுத்து அரை இறுதிப் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார். மற்றொரு காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை இஷாராணி பரூவா, மலேசியா வீராங்கனை வாங் லிங் சிங்கிடம் 21-16, 16-21, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவி வெளியேறினார். தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மின்டனில் இந்தியா சார்பாக பல வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற போதும், தேவிகா மட்டுமே அரையிறுதி வரை முன்னேறி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் நேற்று இந்திய வீரர் தருண் மன்னெபள்ளி, சீன வீரர் எக்ஸ் ஸுவிடம், 11-21, 17-21 என்ற நேர் செட்களில் தோல்வியை தழுவி வெளியேறினார்.
