- பெண்கள் பிரீமியர் லீக் T20
- தில்லி, யு. பி
- மும்பை
- பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்
- பெங்களூர்
- குஜராத்
மும்பை: 2026ம் ஆண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும் 3வது அணி எது என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக பிளே ஆப்பிற்குள் நுழைய உ.பி வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 3 அணிகளும் மல்லுகட்டுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 10 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடித்து, எலிமினேட்டர் சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஏற்கனவே 12 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்த பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றது. லீக் சுற்றின் அனைத்துப் போட்டிகளையும் விளையாடிவிட்ட மும்பை இந்தியன்ஸ் அணி 6 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. ஆனால், நாளை நடைபெறும் டெல்லி – உ.பி வாரியர்ஸ் போட்டியின் முடிவை பொறுத்தே மும்பை பிளே-ஆப் சுற்றுக்குச் முன்னேறுமா என்பது தெரியவரும். டெல்லி அணியும் 6 புள்ளிகள் பெற்றுள்ள போதிலும், அந்த அணியின் ரன் ரேட் மும்பையை விடக் குறைவாக உள்ளது.
ஒருவேளை நாளை நடைபெறும் போட்டியில் டெல்லி வெற்றி பெற்றால், அந்த அணி 8 புள்ளிகளுடன் நேரடியாக 3வது இடத்திற்கு முன்னேறி பிளே-ஆப் சுற்றில் குஜராத் அணியை எதிர்கொள்ளும். ஒருவேளை போட்டி மழையால் கைவிடப்பட்டால், டெல்லி அணி 7 புள்ளிகள் பெற்று பிளே ஆப்புக்கு தகுதி பெற்றுவிடும். 6 புள்ளிகளுடன் உள்ள மும்பை அணியின் ரன் ரேட்டும் (+0.059) டெல்லியை விட சிறப்பாக உள்ளதால், நாளைய போட்டியில் டெல்லி அணி தோற்றால், ரன் ரேட் அடிப்படையில் அவர்கள் வெளியேற அதிக வாய்ப்புள்ளது.
உ.பி வாரியர்ஸை பொறுத்தவரை அந்த அணி 4 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளன. ரன் ரேட்டும் (-1.146) மிக மோசமாக உள்ளது. ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே அந்த அணியால் பிளே ஆப்புக்கு தகுதி பெற முடியும். டெல்லியை 156 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அல்லது டெல்லி நிர்ணயிக்கும் இலக்கை 2 ஓவர்களுக்குள் எட்ட வேண்டும். இது நடைமுறையில் சாத்தியமே இல்லை என்பதால், உ.பி வாரியர்ஸ் அணியின் பிளேஆப் வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது என்றே கூறலாம். பிளே ஆப்புக்கு யார் தகுதி பெறுவார்கள் என்பது நாளை தெரிந்துவிடும் என்பதால் நாளைய போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
