- 5வது டி20
- திருவனந்தபுரம்
- சாம்சன்
- டி 20
- இந்தியா
- நியூசிலாந்து
- கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானம்
- இந்தியன்
- உலக கோப்பை
திருவனந்தபுரம்: இந்தியா-நியூசிலாந்துக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிவிட்டது. எனினும் உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக நடைபெறும் கடைசி டி20 என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த தொடரின் 4 போட்டிகளிலுமே 10, 6, 0 மற்றும் 24 என மோசமான ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் மீண்டெழுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், திருவனந்தபுரம் சஞ்சு சாம்சனின் சொந்த ஊர் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. டி20 போட்டியில் பங்கேற்க இந்தியாவின் பல இளம் வீரர்கள் தவம் கிடந்துவரும் நிலையில், துவக்க வீரராகக் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தும், அதனை அவர் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
உலகக்கோப்பை அணியில் தனது இடத்தைத் தக்கவைக்க வேண்டுமெனில், இன்றைய போட்டியில் அவர் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். எனவே அவர் சோதனைகளை கடந்து இன்று சாதனைபடைக்கவேண்டும். அதே நேரத்தில் சொந்த ஊரில் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம் பெறாமல், மைதானத்தின் வெளியே அமர வைக்கப்பட்டு, `வாட்டர் பாய்’ வேலை செய்வாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காயம் காரணமாக 4வது போட்டியில் களமிறங்காத இஷான்கிஷன், தற்போது முழு உடற்தகுதியை எட்டியுள்ளார். மேலும், வலைப்பயிற்சியில் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்ட அவர், இன்றைய போட்டியில் களமிறங்கத் தயாராக உள்ளதாக தெரிகிறது. ஒருவேளை அவர் களமிறங்கப்பட்டால், சஞ்சு சாம்சனை வெளியே அமர வைக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், சஞ்சு சாம்சனின் சொந்த ஊரில் போட்டி நடைபெறுவதால், அவரை அணியில் தக்கவைத்து, இஷான் கிஷனும் அணியில் இடம்பெறலாம். அப்படி நடந்தால், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.
மேலும் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அக்சர் படேல், கடந்த 2 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி ஆகியோரும் அணிக்கு திரும்பவுள்ளனர். குறிப்பாக வலைப்பயிற்சியில் சக்கரவர்த்தி மிகச் சிறப்பாகப் பந்துவீசியதால், திருவனந்தபுரத்தில் அவருக்கு வாய்ப்பளித்து, ரவி பிஷ்னோய் நீக்கப்படுவார் என தெரிகிறது. மேலும் முக்கிய ஸ்பின்னர் குல்தீப் யாதவ் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். சொந்த ஊரில் ரசிகர்களுக்கு சாம்சன் விருந்தளிப்பாரா? அல்லது அணி நிர்வாகத்தை சோதிப்பாரா? என்பது இன்று தெரிந்துவிடும்.5வது போட்டிக்கான உத்தேச இந்திய அணியின் விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), இஷான் கிஷன், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, சிவம் துபே, ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ்.
