மதுரை: மதுரையில் நேற்று எம்பி சு.வெங்கடேசன், அளித்த பேட்டி: கடந்த வாரம் தெற்கு ரயில்வேயில் பதவி உயர்வுக்கான ஒரு தேர்வு நடைபெற்றது. அதற்கான கேள்விகள் தமிழ், ஆங்கிலம் இந்தி மொழிகளில் இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால், தமிழில் வினாத்தாள் இல்லை. இதற்கு எதிராக ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். நேற்று அடுத்த சுற்றறிக்கை வந்தது. தெற்கு ரயில்வே என்பது அலுவலர்களுக்கு இந்தி அறிவை வளர்த்துக் கொள்ளவும், பயிற்சி, ஆளுமை வளர்த்துக் கொள்ளவும் என வந்துள்ளது. அதாவது இந்தி கற்றுக் கொண்டால் பதவி உயர்வுக்கு அது ஒரு தகுதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று, அப்பட்டமாக இந்தி திணிப்பை எல்லா வகையிலும் மேற்கொள்வதன் இன்னொரு அடையாளம்தான் இது.
குறிப்பாக ஒன்றிய ஆட்சி மொழி சட்டம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமையிலான குழு மிக கொடுமையாக இந்தி பேசாத மாநிலங்கள் மீது குறிப்பாக ரயில்வே, தபால், இன்சூரன்ஸ் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் இந்தியை திணிக்கும் வேலையை செய்கிறது. தெற்கு ரயில்வே சுற்றறிக்கையை வாபஸ் பெற வேண்டும். இந்தி பிரச்னை என்பது அலுவலக சம்பந்தப்பட்ட பிரச்னை மட்டுமல்ல. சமீப காலங்களில் ரயில்வேயில் நடைபெற்ற பல விபத்துகளுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது அந்த மாநில மொழியறிவற்ற ஊழியர்கள் இருப்பதாகும். எனவே, இந்தி திணிப்பை அறவே கைவிட வேண்டும். இவ்வாறு கூறினார்.
