முசிறி: துறையூரில் எடப்பாடி பழனிசாமி பேச இருந்த இடத்துக்கு வந்த ஆம்புலன்சை முற்றுகையிட்ட அதிமுக தொண்டர்கள் டிரைவர் மற்றும் பெண் உதவியாளரை தாக்கினர். இதையொட்டி எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னையில் இன்று ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும், தொமுச பேரவை செயற்குழு உறுப்பினருமான இருளாண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அயராது மக்கள் சேவை செய்து வரும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 18ம் தேதி வேலூர் மாவட்ட பிரசாரத்தின் போது நோயாளியை ஏற்றுவதற்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு, எனது பிரசாரத்தில் 108 ஆம்புலன்ஸ் வந்தால் அதை ஓட்டி வரும் டிரைவர், அதே ஆம்புலன்சில் நோயாளியாக செல்ல வேண்டி வரும் என்று மிரட்டல் விடுத்தார். மேலும் அங்கு கூடி இருந்த தொண்டர்கள் ஓட்டுநரையும் மற்றும் ஆம்புலன்சையும் தாக்கினர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் துறையூருக்கு எடப்பாடி பழனிசாமி வருவதற்கு சில நிமிடங்கள் முன்பு கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர் ஒருவர் மயங்கி விழுந்ததாக 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பின் பேரில் துறையூர் பயர் ஸ்டேஷனில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு சென்றபோது, இடையே 108 ஆம்புலன்ஸ்க்கு அழைத்தவர் விரைவாக வாருங்கள் நோயாளி கவலைக்கிடமாக உள்ளார் என மீண்டும் மீண்டும் தொலைபேசியில் அழைத்து கொண்டு இருந்தார்.
அந்த இடத்தின் அருகே சென்றபோது ஆம்புலன்சை மறித்து அதிமுகவினர் கைகளால் குத்தி சேதப்படுத்தியதுடன், டிரைவர், பெண் உதவியாளரை தாக்கி உள்ளனர், இதனால் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை அனைத்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் தொமுச வன்மையாக கண்டிக்கிறோம். எனவே தாக்கியவர்கள் மீதும், அதை தூண்டும் விதமாக பதட்டமான சூழ்நிலை ஏற்படுத்திய எடப்பாடி பழனிசாமி மீதும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமியை கண்டித்து 108 ஆம்புலன்ஸ் தொமுச சங்க தலைமையில் அனைத்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று(26ம் தேதி) மதியம் 12 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் விரைவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
* அதிமுக நிர்வாகிகள் 14 பேர் மீது வழக்குப்பதிவு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டத்தில் ஆம்புலன்சை வழிமறித்து தாக்கி கண்ணாடிகள் மற்றும் வாகனத்தை உடைத்துள்ளனர். ஓட்டுநர் செந்தில், உதவியாளர் ஹேமலதா (கர்ப்பிணி) ஆகியோரை தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக ஓட்டுநர் செந்தில் புகாரின்படி துறையூர் போலீசார் விசாரணை நடத்தி, துறையூர் நகர்மன்ற கவுன்சிலரும், அதிமுக நகரச் செயலாளருமான அமைதி பாலு என்கின்ற பால முருகவேல், நகர்மன்ற கவுன்சிலர் தீனதயாளன், துறையூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் காமராஜ், எம்ஜிஆர் இளைஞர் அணி நகர செயலாளர் விவேக் உள்ளிட்ட 14 மீது, பெண்களிடம் கண்ணிய குறைவாக நடந்து கொண்டது, அரசு சொத்தை சேதப்படுத்தியது, வாகனத்தை வழி மறித்தது உட்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.
* பாதுகாப்பு வழங்க கோரி ஐகோர்ட் கிளையில் மனு
மதுரையை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் இருளாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 16 ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸில் பைலட்டாக பணியாற்றி வருகிறேன். எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டத்தில் சென்ற ஆம்புலன்ஸ் பைலட் சுரேந்தரை பார்த்து, ‘‘நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் பைலட் அதே வாகனத்தில் நோயாளியாகச் செல்வார்’’ என்று மிரட்டும் வகையில் பேசியுள்ளார். கடந்த 24ம் தேதி திருச்சியில் எடப்பாடி பிரசார கூட்டத்திலும் ஆம்புலன்ஸை சேதப்படுத்தி, பைலட்டை தாக்கியுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் உயிருக்கும், உடலுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியம். அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் முடியும் வரையிலாவது தமிழ்நாடு முழுவதும் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை உறுதிபடுத்துமாறு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
