அன்னூர், ஆக.23: அன்னூர் அருகே பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், அன்னூர் அடுத்துள்ள சொக்கம்பாளையம் பகுதியில் உள்ள பாரதி நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் கார்த்திகா, வேலுமணி, கவிதா, சின்னச்சாமி, சகுந்தலா. இவர்கள் 5 பேரையும் சொக்கம்பாளையம் அருகே உள்ள ஜே.ஜே நகர் பகுதியை சேர்ந்த குமார் மகன் ரஞ்சித் (18) நேற்று முன்தினம் 21ம் தேதி துரத்தி துரத்தி கல்லால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சகுந்தலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் ஆவேசமாக ஒன்று திரண்டு ரஞ்சித்தை பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, தாக்குதலில் காயமடைந்த ரஞ்சித் அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து சிகிச்சை முடிந்த நிலையில், போலீசார் ரஞ்சித் மீது கொலை வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து எஸ்.ஐ அழகேசன் உட்பட போலீசார், ரஞ்சித்தை அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
