×

எடப்பாடி பெயரைக்கூட உச்சரிக்கவில்லை பாஜ-அதிமுக இணைந்த தே.ஜ.கூட்டணி ஆட்சிதான்: நெல்லையில் மீண்டும் அமித்ஷா திட்டவட்டம்

நெல்லை: தமிழ்நாட்டில் அதிமுக-பாஜ இணைந்த தே.ஜ. கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் திட்டவட்டமாக கூறினார். அவரது பேச்சில் எடப்பாடி பெயரைக்கூட குறிப்பிடவில்லை.
பாஜவின் தென்மண்டல பூத் பொறுப்பாளர்கள் மாநாடு நெல்லை தச்சநல்லூர் தனியார் மைதானத்தில் நேற்று நடந்தது. இம்மாநாட்டில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 28 சட்டமன்ற தொகுதி பூத் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: இந்த தமிழ் மண் சரித்திரம், பண்பாடு, கலாசாரம் மிக்கதாகும். தமிழ் மண்ணைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி பொறுப்புக்கு முன்னிறுத்திய பிரதமருக்கும், பாஜ தேசிய தலைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தெய்வீக புலவர் திருவள்ளுவரின் திருக்குறளை 13 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து தமிழுக்கு அணி சேர்த்துள்ளோம். திருவள்ளுவரின் குறள் வழி நின்று பிரதமர் நல்லாட்சி நடத்தி வருகிறார். கடந்த மக்களவை தேர்தலில் நாம் 18 சதவீத ஓட்டுக்களை வாங்கியுள்ளோம். அதிமுக 21 சதவீத ஓட்டுக்களை வாங்கியுள்ளது. இவ்விரு ஓட்டுக்களையும் கூட்டிப் பார்த்தால் 39 சதவீத ஓட்டுக்கள் வருகின்றன. எனவே வருங்காலத்தில் பாஜ – அதிமுக கூட்டணி இணைந்த தேஜ கூட்டணி ஆட்சிதான் அமைய உள்ளது. தேஜ கூட்டணி என்பது வெறும் அரசியல் கூட்டணி அல்ல. தமிழகத்தை மேன்மை அடையச் செய்வதோடு, வளர்ச்சிக்கான கூட்டணியாக அமைந்துள்ளது. வீடு வீடாகச் சென்று ஒன்றிய அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அமித்ஷா முன்னிலையில் பாஜவில் இணைந்தார். பாஜ மாநிலத் தலைவர் நயினார்நாகேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தர்ராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, தமிழக பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ, மாநில இளைஞரணி துணை செயலாளர் நயினார் பாலாஜி, மாநில பொதுச்செயலாளர்கள் பொன்பாலகணபதி, கேசவவிநாயகம், முன்னாள் எம்எல்ஏக்கள் சரத்குமார், விஜயதரணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்று கூறிவரும் நிலையில், அமித்ஷா மீண்டும் பாஜ, அதிமுக கட்சிகள் இணைந்த தேஜ கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று உறுதிபடக்கூறியதும், முதல்வர் ேவட்பாளர் என்று எடப்பாடி பழனிசாமி பெயரையே குறிப்பிடாததும் அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* 1 கி.மீ. நடந்த தொண்டர்கள்
பாஜ பூத் கமிட்டி மாநாட்டில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் அமர்வதற்கு, பாளை, நாங்குநேரி, ராதாபுரம், தென்காசி, நாகர்கோவில், தூத்துக்குடி என சட்டசபை தொகுதிகள் வாரியாக மொத்தம் 28 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று பகலில் நெல்லையில் வெயில் கொளுத்தி எடுத்த நிலையில், மாநாட்டிற்கு வருவோருக்கு தாமரை படம் போட்ட தொப்பி தரப்பட்டது. மாநாட்டுக்கு வந்தவர்களின் வாகனங்கள் தச்சநல்லூர் ரவுண்டானாவிற்கும் முன்பும், மணிமூர்த்திஸ்வரம் பகுதியிலும் நிறுத்தப்பட்டதால், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பாஜ தொண்டர்கள் நடந்தே சென்றனர்.

* நயினார் தேநீர் விருந்து
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று காலையில் கேரளாவில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டிற்கு 3.20 மணிக்குச் சென்று தேநீர் விருந்தில் பங்கேற்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், நாங்குநேரி அருகே மோசமான வானிலை நிலவியது. இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 4 மணியளவில் அமித்ஷா தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அங்கிருந்து அமித்ஷா மாநாடு மேடையை சென்றடைந்தார். மாநாட்டில் பேசி விட்டு நயினார் நாகேந்திரன் வீட்டிற்குச் சென்று தேநீர் விருந்தில் பங்கேற்றார். நெல்லை அல்வா உட்பட 35 வகையான உணவுகளுடன் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.

* அமித்ஷாவை எதிர்த்து போஸ்டர்கள்
அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியினர் போஸ்டர்களை ஒட்டினர். நெல்லை மாநகரின் முக்கியச் சாலைகள், சந்திப்புகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் இந்த போஸ்டர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஒடிசாவை தமிழர் ஆளலாமா? என அமித்ஷா ஒடிசா சட்டமன்ற தேர்தலின் போது பேசிய பேச்சுக்களை குறிப்பிட்டும், ‘மறக்கமாட்டோம்! மறக்கவே மாட்டோம்!’ என்ற தலைப்புடன் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த போஸ்டரில், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் புகைப்படம் பெரிதாக இடம்பெற்றிருந்தது.

Tags : Edappadi ,BJP ,AIADMK alliance ,Amit Shah ,Nellai ,Union ,Home Minister ,AIADMK ,BJP alliance ,Tamil Nadu ,Southern Zone Booth In-charges Conference ,Thachanallur ,Nellai… ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்