×

மோடியின் அமைச்சரவையில் குற்றப் பின்னணி கொண்ட 39% பேர் மீது 130வது சட்டப் பிரிவு பாயுமா? திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி கேள்வி

சென்னை: திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி வெளியிட்ட அறிக்கை: நெல்லை பாஜ பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க வந்த ஒன்றிய உள் துறை அமித்ஷா, ஏற்கனவே கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன பொய்களைப் பேசிச் சென்றிருக்கிறார். வாக்கு திருட்டு போல திருக்குறளை வைத்து தமிழர் ஓட்டுகளை எல்லாம் திருட முடியாது. ஜி.எஸ்.டி என்ற கொடிய வரியை வசூலித்து மக்களை வஞ்சிக்கும் அமித்ஷா எல்லாம் திருக்குறளையும் திருவள்ளுவரையும் பேசத் தகுதியே இல்லை. சோனியா காந்திக்கு ஒரே லட்சியம், ராகுல் காந்தியை பிரதமராக்குவதே கனவு, அதேபோல திமுகவிற்கு உதயநிதியை முதல்வராக்குவதே கனவு, இந்த இரண்டுமே நடக்காது எனச் சொல்லியிருக்கிறார் அமித்ஷா.

அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா எப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குச் செயலாளர் ஆனார்? அவருடைய கிரிக்கெட் அறிவு என்ன? அவரை ஓட்டு போட்டா தேர்ந்தெடுத்தார்கள்? மக்கள் வாக்களித்தால் யாரும் முதல்வர் ஆகலாம். தமிழ்நாட்டில் யார் முதல்வர் ஆக வேண்டும் என்பதை இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவரான அமித்ஷா முடிவு செய்ய முடியாது. துணை முதல்வர் உதயநிதியை பார்த்து அமித்ஷாவுக்கு பயம் வந்துவிட்டது போல. 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜ அதிமுக கூட்டணிக்கு அவர் சமாதி கட்டுவார். எங்களுக்கான முதல்வர் அறிவாலயத்தில் இருந்து வருவார். அதிமுக பாஜ கூட்டணிக்கு நாக்பூரில் இருந்துதான் வருவார்கள்.

வரப்போகும் தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிந்து, என்.டி.ஏவின் வெற்றியை அறிவிக்க வேண்டும் எனப் பேசியிருக்கிறார் அமித்ஷா. இந்தியாவில் இருந்தே வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டிய நச்சு செடி பாசிச பாஜ. இந்தியா கூட்டணியும் மக்களும் அதனை நிகழ்த்திக் காட்டுவார்கள். 130-வது சட்டத்திருத்தத்தை ‘கறுப்பு சட்டம்’ என்கிறார் ஸ்டாலின், அதைச் சொல்ல அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை’’ என்கிறார் அமித்ஷா. சொராபுதீன் என்கவுன்டர் வழக்கில் சிறையிருந்த நீங்கள் எல்லாம் இந்தச் சட்டத்தை இயற்ற தகுதியில்லாதவர்.

மோடியின் அமைச்சரவையில் 28 அமைச்சர்கள் மீது வழக்குகள் இருக்கிறது. இதில் 19 அமைச்சர்கள் மீது மிகவும் கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. மோடியின் அமைச்சரவையில் 39 சதவிகிதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். இவர்கள் மீதெல்லாம் 130வது சட்டப் பிரிவு பாயுமா? தங்களுக்குப் பிடிக்காதவர்களை ஆட்சியிலிருந்து விரட்டக் கொண்டு வந்த சட்டத்தை ‘கறுப்பு சட்டம்’ என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பார்களாம்.தனது அரசியல் எதிரிகளை மிரட்டி தன்னால் ஆளமுடியாத மாநில அரசுகளை முடக்குவதற்காக 130வது அரசியல் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திருக்கிறது பாஜ.

இந்தச் சர்வாதிகாரக் கருப்புச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து தமிழ்நாடு முதல்வர் எழுப்பிய கண்டனக் குரல் அமித்ஷாவை ஆட்டங்காணச் செய்திருக்கிறது, அதனால் தான் உடனே தமிழ்நாட்டிற்கு ஓடி வந்து தனது புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுச் சென்றிருக்கிறார். நாட்டின் மிகப்பெரிய ஊழல் கட்சி திமுக என தேய்ந்த ரிக்கார்டு போலச் சொல்லியிருக்கிறார் அமித்ஷா. 2018 ஜூலை 9ம் தேதி சென்னையில் பேசிய அமித்ஷா, ‘’நாட்டிலேயே ஊழல் அதிகமாக உள்ள மாநிலமாகத் தமிழகம் உள்ளது’’ என்று அன்றைக்கு இருந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியைச் சொன்னார்.

2016 ஏப்ரல் 14ம் தேதி திருச்சியில் பேசிய அமித்ஷா, ’’நாட்டிலேயே ஊழல் மிகுந்தது ஜெயலலிதா ஆட்சிதான்’’ என்றார். ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சிகளை ஊழல் ஆட்சியென்று சொல்லிவிட்டு அதிமுகவோடு கூட்டணி போடுவது எல்லாம் அமித்ஷாவின் சாணக்கியத்தனத்தில் அடங்குமா? இவர் தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சி நடக்கிறது என்று பேசுவைத் கேட்டால் சின்னக் குழந்தையும் கைகொட்டிச் சிரிக்கும். தேர்தல் பத்திர ஊழல், சிஏஜி சுட்டிக்காட்டிய 7.5 கோடி ஊழல், ரபேல் விமான முறைகேடு ஊழல் என ஒன்றிய பாஜ அரசு மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அணி வகுக்கின்றன.ஊழல் புகார்களில் சிக்கியவர்களை பாஜ வாஷிங் மெஷினில் போட்டு, தூய்மையானவர்கள் என பட்டம் கொடுத்து பதவி கொடுத்து அழகு பார்க்கும் அமித்ஷாவிற்கு ஊழலை பற்றி பேச என்ன தகுதியிருக்கிறது?

பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்குத் திட்டமில்லை, சமஸ்கிருதத்துக்கு நிதியை அள்ளிக் கொடுத்து விட்டு தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்க மனமில்லை, தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் கீழடி உண்மையை ஏற்கத் திராணி இல்லை, தமிழ்நாட்டு மீனவர்களின் கைதைத் தடுக்க வக்கில்லை, இந்த இலட்சணத்தில் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவோம் எனப் பேசக் கொஞ்சமும் வெட்கமில்லையா. தமிழ்நாடு இன்றைக்கு நாட்டிலேயே பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருக்கிறது என்கிற உண்மை உறுத்தியிருப்பதால் மக்களிடம் தோற்றுப் போன இந்தப் பொய்களை நம்பி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.

ஆயிரம் அமாவாசைகள் வந்தாலும் சரி பாஜவின் நரித்தனம் தமிழ்நாட்டில் ஒருநாளும் வெற்றியடையாது, விடியல் ஆட்சியை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது. தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகப் பாஜவையும் அதன் பண்ணையடிமையாக மாறிவிட்ட அதிமுகவையும் தமிழ்நாட்டு மக்கள் 2026 தேர்தலில் ஓட ஓட விரட்டக் காத்திருக்கிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆயிரம் அமாவாசைகள் வந்தாலும் சரி பாஜவின் நரித்தனம் தமிழ்நாட்டில் ஒருநாளும் வெற்றியடையாது, விடியல் ஆட்சியை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது.

Tags : Modi ,DMK ,Deputy General Secretary ,A. Raja MP ,Chennai ,Union ,Home Minister ,Amit Shah ,Nellai ,BJP ,Booth Committee ,
× RELATED யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை...