×

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 சின்னருடன் கோப்ரிவா மோதல்; நாளை முதல் சுற்று போட்டிகள்

நியுயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நாளை துவங்கவுள்ளன. முதல் நாள் போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர், செக் குடியரசு வீரர் விட் கோப்ரிவா உடன் மோத உள்ளார்.
முக்கியத்துவம் வாய்ந்த கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தகுதிச் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. முதல் சுற்றுப் போட்டிகள், நாளை துவங்க உள்ளன. ஆடவர் ஒற்றையர் பிரிவில், முதல் சுற்றுப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர் (24), செக் குடியரசு வீரர் விட் கோப்ரிவா (28) உடன் மோத உள்ளார்.

ஸ்பெயினை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரரும், சமீபத்தில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவருமான கார்லோஸ் அல்காரஸ் (22), அமெரிக்க வீரர் ரெய்லி ஒபெல்கா (27) உடன் மோத உள்ளார். ஜெர்மனியை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (28), சிலி நாட்டின் அலெஜாண்ட்ரோ அல்வரெஸ் (28) உடன் களமாட உள்ளார். மேலும், முதல் நாள் நடக்கும் போட்டிகளில் அமெரிக்க வீரர்கள் டெய்லர் ஃப்ரிட்ஸ், டாம்மி பால், நார்வே வீரர் கேஸ்பர் ரூட், செக் வீரர்கள் ஜிரி லெஹெக்கா, தாமஸ் மகாக், கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் புப்லிக், அர்ஜென்டினா வீரர் பிரான்சிஸ்கோ செருண்டோலோ உள்ளிட்ட பல பிரபல வீரர்கள் பங்கேற்கின்றனர். யுஎஸ் ஓபன் போட்டிகளில் தற்போதைய முதல் நிலை வீரர் சின்னர் தோற்று, அல்காரஸ் வெல்லும் பட்சத்தில் சின்னரின் நம்பர் 1 அந்தஸ்து பறிபோகும் வாய்ப்பு உள்ளது.

* ரெபேக்கா உடன் மோதல்: சாதிப்பாரா சபலென்கா?
யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் நாளை நடக்கும் முதல் சுற்றுப் போட்டியில் பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா (27), சுவிட்சர்லாந்து வீராங்கனை ரெபேக்கா மாஸரோவா (26) உடன் மோதவுள்ளார். சமீபத்தில் நடந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற, போலந்தை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியடெக் (24), கொலம்பியா வீராங்கனை எமிலியானா ரெஸ்ட்ரெபோ (24) உடன் மோத உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீராங்கனை கோகோ காஃப் (21), ஆஸ்திரேலியா வீராங்கனை அஜ்லா டாம்ஜனோவிக் (32) உடன் மோதவுள்ளார். தவிர, முதல் நாள் போட்டியில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா, ஆஸ்திரேலியா வீராங்கனை டாரியா கசட்கினா, உக்ரைன் வீராங்கனைகள் மார்தா கோஸ்ட்யுக், எலினா ஸ்விடோலினா, பெல்ஜியம் வீராங்கனை எலிஸா மெர்டென்ஸ், ரஷ்யாவை சேர்ந்த இளம் வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா, கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபாகினா உள்ளிட்ட பல நட்சத்திர வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.

Tags : US Open Tennis ,Gobryva ,New York ,US Open tennis Grand Slam ,Janic Cinner ,Italy ,Czech Republic ,Vit Kobryva ,
× RELATED கான்வே இரட்டை சதம்: நியூசிலாந்து 575 ரன்கள் குவிப்பு