அடிலெய்ட்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்துக்கு இடையேயான 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் கடந்த 17ம் தேதி தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் 371 ரன்னுக்கு அவுட் ஆனது. அடுத்த ஆடிய இங்கிலாந்து 2ம்நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 213 ரன் எடுத்திருந்தது. பென் ஸ்டோக்ஸ் 45, ஆர்ச்சர் 30 ரன்னுடன் களத்தில் இருந்தனர். 3ம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதங்களை பூர்த்தி செய்தனர். ஸ்டோக்ஸ் 83 ரன்னிலும், ஆர்ச்சர் 51 ரன்னிலும் அவுட் ஆக, இங்கிலாந்து அணி 286 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேப்டன் கம்மின்ஸ், போலான்ட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
85 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர் ஜேக் வெதரால்ட் ஒரு ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த லபுஷேன் 13, கவாஜா 40, கேமரூன் கிரீன் 7 ரன்னில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். மறுபுறம் சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட், தனது 11 சதத்தை அடித்து அசத்தினார். இவருடன் ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும் அரைசதம் விளாசினார். 3ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 271 ரன் எடுத்துள்ளது. டிராவிஸ் ஹெட் 142 ரன்னுடனும், கேரி 52 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 356 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இன்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்குகிறது.
