தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய அணி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் ரோஹித் மற்றும் விராட் ஆகியோர் ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதே பார்முடன் அவர்கள் நியூசிலாந்து தொடரிலும் அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு, இந்திய அணி 2027 உலகக்கோப்பையை நோக்கித் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. ரோஹித் மற்றும் விராட் ஆகியோரின் அனுபவம் அணிக்கு மிக முக்கியம் என்பதால், அவர்கள் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து கவனம் செலுத்துவர். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்தவுடன், டி20 உலக கோப்பை, ஐபிஎல் தொடர் நடைபெறும் என்பதால் அடுத்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை ஜூன் மாதம் நடைபெறும் இங்கிலாந்து தொடரில் மட்டுமே இந்திய ஜெர்சியில் காண முடியும்.
டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இன்று அறிவிப்பு:
இந்தியா உள்பட 20 அணிகள் பங்கேற்கும் 10வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. அடுத்த ஆண்டு பிப். 7ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை போட்டி நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. தேர்வுக் குழு தலைவர் அகர்கர் தலைமையில், இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கு பின் இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.
வருண்சக்கரவர்த்தி தம்பி வந்தாச்சு:
கொல்கத்தா: ஐபிஎல் மினி ஏலத்தில் 22 வயதான ஹரியானா வீரர் தக்ஷ் கம்ராவை 30 லட்ச ரூபாய்க்கு கேகேஆர் அணி வாங்கி உள்ளது. இவரின் பந்துவீச்சு முறை மற்றும் நுணுக்கங்கள் கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் வருண் சக்கரவர்த்தியைப் போலவே இருப்பதால், அவர் ‘வருண் 2.0’ என்றும், வருணின் ‘இளைய சகோதரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். வருண் வீசும் அதே ‘ஜோனில்’ கம்ரா பந்துவீசுவதாக அவரது பயிற்சியாளர் சந்தீப் கரப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தக்ஷின் கூக்ளி பந்துகள் மணிக்கு 95-97 கிமீ வேகத்தில் வரும். அவை நேரடியாக ஸ்டம்புகளை அல்லது பேட்ஸ்மேன்களின் கால்களைப் (Pad) பதம் பார்க்கும். கேரம் பால், கூக்ளி மற்றும் ஸ்லைடர் என நான்கு விதமாக பந்துவீசி வீரர்களை திணறடிப்பதில் கில்லாடியாவார்’ என்றார். கம்ரா ஆல்-ரவுண்டர் என்பதும் கேகேஆர் அணிக்கு கூடுதல் பலம்.
பிரபல கால்பந்து வீரர் சுட்டுக்கொலை:
குயாகு: பார்சிலோனா கிளப் அணிகளுக்காக விளையாடி வந்த ஈக்வடார் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் போதை கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் பிரபல கால்பந்து வீரர் மரியோ பினீடா (33), முன்பு பார்சிலோனா ஸ்போர்டிங் கிளப்பிற்காக விளையாடினார். பின்னர், பார்சிலோனா எஸ்சி அணி, ஃப்ளூமினென்ஸ் மற்றும் எல் நேஷனல் அணிகளுக்காக விளையாடி வந்தார். மரியோ பினீடா நேற்று முன்தினம் குயாகுவில் உள்ள ஒரு கறிக்கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த இரு நபர்கள் திடீரென அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். இதில் மரியோ பினீடா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவர் கொல்லப்பட்டது கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள குயாகு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொல்லப்பட்ட மரியோ பினீடாவிற்கு, ஃப்ளூமினென்ஸ் மற்றும் பார்சிலோனா எஸ்சி அணிகள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளன. ஈக்வடாரில் சமீபகாலமாக போதை பொருள் கடத்தல் கும்பலின் ஆதிக்கத்தால் வன்முறை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் சுமார் 9,000 பேர் இக்கும்பலால் அங்கு கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
