×

மதுரை பாரைபத்தியில் நடைபெறுகிறது: இன்று தவெக 2வது மாநில மாநாடு; 3,500 போலீசார் பாதுகாப்பு

திருமங்கலம்: நடிகர் விஜய்யின் தவெக 2வது மாநில மாநாடு மதுரை அருகே பாரைபத்தியில் இன்று நடைபெறுகிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை அருகே பாரைபத்தியில் இன்று நடைபெறுகிறது. இதற்காக மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் மாநாடு திடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்காக 4 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு திடலின் முகப்பில் அண்ணா, எம்ஜிஆர் படங்களுடன் விஜய் படம் இடம் பெற்றுள்ளது.

மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் இன்று மாநாட்டையொட்டி போக்குவரத்து முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் விஜய் தொண்டர்களை நடந்து சென்று சந்திக்கும் வகையில் 250 மீட்டர் நீளத்திற்கு ‘ரேம்ப் வாக்’ நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் உட்காருவதற்காக சுமார் 1.50 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மாநாடு இன்று பிற்பகல் 3 மணிக்கு துவங்கி இரவு 7.15 மணி வரையில் நடைபெறுகிறது. மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், நெல்லை, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 3,500 போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

2 ஐஜிகள், 10 எஸ்பிக்கள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் ஈடுபடவுள்ளனர். மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் நடைபெற உள்ளதால் சாலை இடையில் உள்ள தடுப்பு சுவர்கள் தற்காலிகமாக நான்கு இடங்களில் சுமார் 30 அடி அளவிற்கு உடைக்கப்பட்டு அதன் வழியாக வாகனங்கள் இருபுறமும் வந்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டையொட்டி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் கூடக்கோவில், எலியார்பத்தி, வலையங்குளம், பாரைபத்தி, விருதுநகர் மாவட்ட பகுதியிலுள்ள ஆவியூர், காரியாபட்டி பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* 100 அடி கொடிகம்பம் சாய்ந்து கார் சேதம்
மாநாட்டின் முக்கிய நிகழ்வாக 100 அடி உயர கொடிக் கம்பத்தில் தவெக தலைவர், நடிகர் விஜய் இன்று கொடியேற்றுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாநாட்டு திடலில் நேற்று பிற்பகலில் 100 அடி உயரத்திற்கு கொடி கம்பம் நிறுவும் பணியில் கட்சியினர் ஈடுபட்டிருந்தனர். கிரேன் உதவியுடன் கொடிக்கம்பம் ஊன்றும் பணி துவங்கியது. கிரேன் உதவியுடன் கொடிக்கம்பத்தை ஊன்றி நட்டுகளுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, யாரும் எதிர்பாராத வகையில் கொடிக்கம்பம் திடீரென சாய்ந்து விழுந்தது. அப்போது அந்த பகுதியை சுற்றிலும் நின்றிருந்த தவெக நிர்வாகிகளும், தொண்டர்களும் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். சாய்ந்த கொடிக்கம்பம் அங்கு நின்றிருந்த இன்னோவா கார் மீது விழுந்ததில் கார் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. சேதமடைந்த காருக்கு பதிலாக, புதிய கார் வாங்கித் தருவதாக கட்சி தலைமை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

* எம்ஜிஆர், அண்ணா படங்கள் ஏன்?
அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோர் தான் தவெகவின் கொள்கைத் தலைவர்கள் என அறிவித்து செயல்பட்டு வரும் நிலையில், முதல் மாநாட்டில் இவர்களது படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால், மதுரை மாநாட்டில் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோருடன் விஜய் இருக்கும் வகையில் தோரண வாசல் அமைத்திருப்பது அரசியல் நோக்கர்கள் மற்றும் அதிமுகவினரிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களை ஸ்டாம்ப் சைஸ் அளவில் சுருக்கிவிட்டு எம்ஜிஆரையும், அண்ணாவையும் முன்னிலைப்படுத்தி காட்டுவது, அதிமுகவிற்கு மாற்றாக தன்னை முன்னிலைப்படுத்தும் முயற்சி என்றும், வேறு கட்சிகளை துவங்கிய 3 பேரின் படங்களை தனது கட்சி மாநாட்டிற்கு பயன்படுத்துவது இதுவே முதன்முறை என்றும் பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.

* பேனர் வைத்த ரசிகர் மின்சாரம் தாக்கி பலி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாம் கரிசல்குளம் பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன் (19). ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருந்தார். மதுரையில் இன்று நடைபெறும் தவெக மாநில மாநாட்டிற்காக கரிசல்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பிளக்ஸ் பேனர் வைக்கும் பணி நடைபெற்றது. காளீஸ்வரன் அப்பகுதியில் சாத்தி வைக்கப்பட்டிருந்த இரும்பு குழாயை எடுத்தபோது, அருகே சென்ற உயரழுத்த மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

Tags : Madurai ,2nd state convention ,Paraipathi ,Thirumangalam ,Vijay ,Thaveka ,2nd state convention of Tamil Nadu Vetri Kazhagam ,Madurai - Thoothukudi ,
× RELATED முதல்வர் மாற்றம் விவகாரம்; நானும்...