கலசபாக்கம், ஆக. 19: கலசபாக்கம் அருகே திருமண அழைப்பிதழ் ெகாடுக்க சென்றபோது பைக் மீது லாரி மோதியதில் மணமகளின் தாய் இறந்தார். தந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா அமர்நாத்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(52). இவரது மனைவி பச்சையம்மாள்(45). இவர்களது மகளுக்கு திருமணம் நடைபெற தேதி நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை செல்வராஜ், பச்சையம்மாள் இருவரும் பைக்கில் பாடகம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க சென்றனர். அங்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு இரவு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர். கலசபாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் கூட்ரோடு அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அங்கிருந்த பொதுமக்கள், இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பச்சையம்மாள் பரிதாபமாக இறந்தார். செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த கலசபாக்கம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுவிட்ட லாரியையும், அதன் டிரைவரையும் தேடி வருகின்றனர். மகள் திருமணத்திற்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது விபத்தில் மணமகளின் தாய் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
