×

30.13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை திறப்பு: துணை முதல்வர் உதயநிதி திறந்தார்

தண்டையார்பேட்டை: சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகர், சீனிவாசபுரம், மின்ட் மாடர்ன் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்த பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை பயன்படுத்திவந்தனர். ஆனால் இந்த வழியாக கடற்கரை ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், கூட்ஸ் ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள் அடிக்கடி செல்வதால் எப்போதும் கேட் மூடப்பட்டு மக்கள்அவதிப்பட்டு வந்தனர். இதனால் இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தரவேண்டும் என்று கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்தநிலையில், கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது சுரங்க பாலம் கட்டுவதற்கு பூஜை போடப் பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சுரங்க பாலப்பணிகள் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் 30.13கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், போஜராஜன் சுரங்கப்பாதை திறப்பு விழா இன்று நடைபெற்றது.இந்த விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சுரங்கப்பாதையை திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன்மூலம் மக்களின் 50 ஆண்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் ஆர்.டி. சேகர், ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், வடக்கு வட்டாரதுணை ஆணையர் கட்டா
ரவி தேஜா, ராயபுரம் பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ், செந்தில்குமார், மண்டல குழு தலைவர்கள் ஸ்ரீராமுலு, நேதாஜி கணேசன், மாநில வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் மருது கணேஷ், சென்னை வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் லட்சுமி வேலு, மாமன்ற உறுப்பினர்கள், வட்ட செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

‘’எங்களுடைய நீண்டநாள் பிரச்னையை தீர்த்து வைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம், அவசரத்துக்கு ரயில்வே கேட்டை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தோம். இதனால் உடல்நிலை சரியில்லாதவர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளதால் நிம்மதியாக உள்ளோம்’ என்று மக்கள் தெரிவித்தனர்.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi ,Thandaiyarpettai ,Washermanpettai ,Bhojarajan Nagar ,Srinivasapuram ,Mint Modern City ,Chennai Royapuram ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்