×

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் வின்சென்ட் கெய்மர் சாம்பியன்: சேலஞ்சர் பிரிவில் பிரனேஷ் முதலிடம்

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி சென்னையில் நடந்தது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் வெளிநாட்டு வீரர்கள் உட்பட 10 பேரும், சேலஞ்சர் பிரிவில் இந்தியர்கள் 10 பேரும் பங்கேற்றனர். ரவுண்ட் ராபின் முறையில் தலா 9 சுற்றுகள் கொண்ட ஆட்டமாக இந்தப் போட்டி நடந்தது. மாஸ்டர்ஸ் பிரிவில் கடைசி நாளான நேற்று 9வது மற்றும் கடைசி சுற்று ஆட்டங்கள் நடந்தன.

கடைசிச் சுற்றில் ஜெர்மனி வீரர் வின்சென்ட் கெய்மர் நேற்று கருப்பு நிற காய்களுடன் அமெரிக்க வீரர் ராப்சன் ரே உடன் மோதினார். அதில் 5வது வெற்றியை பதிவு செய்த கெய்மர் 7 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அதேபோல் இந்திய வீரர்கள் முரளி-அர்ஜூன் பலப்பரீட்சை நடத்திய ஆட்டம் டிராவில் முடிந்ததால் இருவருக்கும் தலா அரைப் புள்ளி கிடைத்தது. அதனால் இருவரும் தலா 5 புள்ளிகளுடன் த ங்கள் ஆட்டத்தை முடித்தனர்.

நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியும் 5 புள்ளியை பெற்றார். தலா 5 புள்ளிகளை பெற்ற இந்த மூவரும் கெய்மருக்கு அடுத்த இடங்களை பெற்றனர். சேலஞ்சர் பிரிவில் நேற்று நடந்த கடைசி சுற்றில் பிரனேஷ்-ஹர்ஷவர்த்தன் மோதினர். அதில் ஹர்ஷவர்தன் வெற்றிப் பெற்றார். அதேபோல் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பில் இருந்த அபிமன்யூ புரோனிக்கை, தமிழ்நாட்டு வீரர் இனியன் பன்னீர்செல்வமும், லியோன் லூக்கை மற்றொரு தமிழ்நாட்டு வீரர் அதிபன் பாஸ்கரனும் சாய்த்தனர்.

அதனால் பிரச்னையின்றி பிரனேஷ் முனிரத்தினம் 6.5 புள்ளிகளுடன் சேலஞ்சர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்தப் பிரிவில் எஞ்சிய இடங்களை, அபிமன்யு புராணிக் – 6, லியோன் லூக் மென்டோன்கா – 6, அதிபன் பாஸ்கரன் – 6, பன்னீர்செல்வம் இனியன் – 5.5, புள்ளிகளுடன் பெற்றனர். கிராண்ட் மாஸ்டர் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த வீரர்களுக்கு கோப்பைகளுடன் முறையே ரூ.25, 15, 10 லட்சம் ரொக்கப் பரிசாக அளிக்கப்பட்டன. சேலஞ்சர்ஸ் பிரிவில் பங்கேற்றவர்களில் முதலிடம் பிடித்த வீரருக்கு ரூ.7லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

Tags : Chennai Grand Masters ,Vincent Keimer ,Pranesh ,Chennai ,Chennai Grand Masters International Chess Tournament ,Indians ,
× RELATED கான்வே இரட்டை சதம்: நியூசிலாந்து 575 ரன்கள் குவிப்பு