- திருப்பத்தூர்
- பாஜக
- ஜனாதிபதி
- நயினார் நாகேந்திரன்
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- தமிழ்நாடு சட்டமன்றம்
- பொதுச்செயலர்…
திருப்பத்தூர்: வருங்காலத்தில் ஒரே மேடையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருப்பார்கள்’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது குறித்து அவரிடமே கேளுங்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்தொடர்ச்சியாக திருப்பத்தூருக்கு நேற்று வந்த அவர் அனைத்து சங்க நிர்வாகிகள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: பாஜக கூட்டணியில் நாங்கள் உள்ளோம். அதனால் மற்றவர்களை கூட்டணியில் இணைக்க நாங்கள் முடிவு செய்ய வேண்டும். அதிமுக தான் தலைமை தாங்குகிறது.அதிமுக உட்கட்சி விவகாரத்தை மேடையில் பேசுவது இல்லை. இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் எந்த கட்சிக்கும் செல்லலாம். முன்னாள் எம்பி.க்கள் அன்வர்ராஜா, மைத்ரேயன் போன்றவர்கள் வேறு கட்சிக்கு சென்றிருக்கிறார்கள். அவர்கள் எந்த கட்சியிலும் நிலையாக இருக்க மாட்டார்கள்,’ என்றார்.
அப்போது, `வருங்காலத்தில் ஒரேமேடையில் ஓபிஎஸ், இபிஎஸ் இருப்பார்கள்’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு, டென்ஷனான எடப்பாடி பழனிசாமி,`இந்த கேள்விக்கு அவரிடமே பதில் கேளுங்கள். நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் எடுப்பது தான் கூட்டணியின் இறுதிமுடிவு. பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைவார் என்ற கேள்விக்கும் இதுதான் பதில். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது. இன்னும் பல கட்சிகள் எங்கள் தலைமையை ஏற்க வருவார்கள்,?’என்றார்.
* திருப்பத்தூரா? திருப்பூரா?
எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் அளித்த பேட்டியின்போது, திருப்பத்தூர் என்பதற்கு பதிலாக திருப்பூர் மாவட்டம் என கூறினார். அதன்பின்னர் அங்கிருந்தவர்கள் தவறை சுட்டிக்காட்டினர். இதையடுத்து திருப்பத்தூர் எனக்கூறினார். மேலும், தனக்கு தொண்டையில் புண் ஏற்பட்டுள்ளது. இதனால் சரிவர பேச முடியாத சூழலில் உள்ளதாகவும் கூறினார்.
